சென்னை: உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான சினிமா ரசிகர்கள் 'லெட்டர்பாக்ஸ்ட்' (Letterboxd) எனும் செயலியை பயன்படுத்துகிறார்கள். திரைப்படங்கள், ஆவணப்படங்கள், வெப் சீரிஸ்கள், குறும்படங்கள் என முழுக்க முழுக்க சினிமா ரசிகர்களுக்கான தங்க சுரங்கம் இந்த செயலி.
நாம் பார்க்கும் திரைப்படங்களிலிருந்து குறும்படங்கள் வரை, எந்த படைப்பை வேண்டுமானாலும் இதில் பதிவிட்டுக் கொள்ளலாம். எந்த தேதியில் பார்த்தோம் என தேதிவாரியாகவும் குறித்துக் கொள்ளலாம். அவற்றைப் பற்றிய நமது கருத்துக்களை பதிவு செய்வதோடு ஸ்டார் கணக்கில் ரேட்டிங் கொடுக்கலாம்.
மேலும் இதில் நாம் பார்க்க நினைக்கும் படைப்புகள் மற்றும் புதிதாக அறிமுகமாகும் படைப்புகள் குறித்து வைத்து பட்டியலிட்டுக் கொள்ளலாம்.
Letterboxd செயலியின் மூலம் ஆண்டுதோறும் அதிகம் ரேட்டிங் செய்யப்பட்ட படைப்புகளைப் பற்றிய அறிக்கை வெளியிடப்படும். 2024ஆம் ஆண்டுக்கான Letterboxd அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. உலக அளவில் கவனம் பெற்ற படங்களின் வரிசையில் தமிழ் மற்றும் பல்வேறு இந்திய மொழி திரைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.
2024ஆம் ஆண்டு மொத்தமாக அதிக ரேட்டிங் பெற்ற திரைப்படங்களின் வரிசையில் ’டூன் 2’ (Dune 2) முதலிடத்தைப் பெற்றுள்ளது. ’மெய்யழகன்’ இந்த வரிசையில் உலகளவில் 13வது இடத்தைப் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் ’How to Make Millions Before Grandma Dies’ என்ற தாய்லாந்து திரைப்படம் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.
மேலும் திரைப்படங்களின் ஜானர்களுக்கேற்ப பல்வேறு பிரிவுகளிலும் தமிழ்ப்படங்கள் கவனிக்கத்தக்க இடத்தைப் பெற்றுள்ளன. அதிக ரேட்டிங் பெற்ற ஆக்ஷன், அட்வன்சர் திரைப்படங்களின் வரிசையில் மலையாளத் திரைப்படமான ’மஞ்சுமல் பாய்ஸ்’ 3வது இடத்தையும் ’ஆவேஷம்’ 5வது இடத்தையும் விஜய் சேதுபதியின் ’மகாராஜா’ 7வது இடத்தையும் பிடித்திருக்கிறது. அதிக ரேட்டிங் பெற்ற காமெடி படங்கள் வரிசையில் 6வது இடத்தைப் பிடித்துள்ளது ஆமிர்கான் தயாரித்த ’லபடா லேடிஸ்’ திரைப்படம்.
The Letterboxd 2024 Year in Review: https://t.co/l7LmiqPd1j
— Letterboxd (@letterboxd) January 8, 2025
HIGHEST RATED ACTION/ADVENTURE: Dune: Part Two
See the full list on Letterboxd: https://t.co/GOSnm8ESVO pic.twitter.com/rm9e300OTU
இதையும் படிங்க: நான் எப்போதுமே ரகுமானின் தொண்டன் தான் - அனிருத்
அதிக ரேட்டிங் பெற்ற ட்ராமா திரைப்படங்கள் வரிசையில் ’மெய்யழகன்’ 6வது இடத்தையும் மலையாளத் திரைப்படமான ’ஆட்டம்’ 8வது இடத்தையும் பிடித்துள்ளது. மம்முட்டி நடித்த ’பிரம்மயுகம்’ திரைப்படம் அதிக ரேட்டிங் பெற்ற ஹாரர் திரைப்பட வரிசையில் 4வது இடத்தைப் பெற்றுள்ளது.
கடந்த வருட தமிழ் சினிமாவின் முக்கிய படமாக பார்க்கப்பட்ட ’லப்பர் பந்து’அதிக ரேட்டிங் பெற்ற ரொமாண்டிக் திரைப்பட வரிசையில் 6வது இடத்தையும், அதிக ரேட்டிங் பெற்ற ஸ்போர்ட்ஸ் திரைப்பட பிரிவில் இது 3வது இடத்தையும் பிடித்துள்ளது.
மிகவும் குறைவாக ரேட்டிங் செய்யப்பட்ட படங்களின் வரிசையில் கடந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜோக்கர் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ’Joker: Folie à Deux’ 4வது இடத்தைப் பெற்றுள்ளது. சமீபகாலமாக உலகளவில் தமிழ் படங்களும் மலையாளப்படங்களும் கவனம் ஈர்த்து வருவது சினிமா ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.