திருவாரூர்: திருத்துறைப்பூண்டி வட்டத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கரை தெற்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (47). இவருக்கு பானுமதி என்ற மனைவியும், விஷ்வா, பாக்யலட்சுமி என்கின்ற மகனும், மகளும் உள்ளனர். பாஸ்கரன் திருவாரூரில் இருந்து நாகை செல்லும் புறவழிச் சாலையில், பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். இவருக்கு உதவியாக அவரது மகனும், அந்தக் கடையில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த புதன்கிழமை மதியம் வெளியில் சென்று வருவதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்ற பாஸ்கரன், கூடூர் பகுதியில் தற்கொலைக்கு முயன்று மயங்கி விழுந்து கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதி இளைஞர்கள், ஆம்புலன்ஸ் மூலம் பாஸ்கரனை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது மொபைல் பின்புறம் இருந்த கடிதம் ஒன்று, பாஸ்கரனின் மகனுக்கு கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், நான் திருவாரூர் ரயில்வே காலனி பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான கோவிந்தராஜன் மற்றும் அவரது மகன் இனியன் ஆகியோரிடம், கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கடன் வாங்கினேன்.
இதுவரை 18 லட்சம் ரூபாய் வட்டி கட்டிய நிலையில், கந்து வட்டி மீட்டர் எனக் கூறி, மேற்கொண்டு 12 லட்சம் ரூபாய் கேட்டு தொடர்ந்து என்னை மிரட்டி வந்ததுடன், எனது மகனை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினர். இதனால் என்னால் தொழில் செய்யவே முடியவில்லை. எனவே, எனது இந்த முடிவிற்கு கோவிந்தராஜ் மற்றும் அவரது மகன்தான் காரணம் எனக் குறிப்பிட்டு, அவர்களது தொலைபேசி எண்களையும் அந்த கடிதத்தில் எழுதி வைத்துள்ளார்.