மதுரை: சமீபத்தில் ஆன்லைன் டிரேடிங் மூலமாக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி 92 லட்சத்து 16 ஆயிரத்து 710 ரூபாய் பண மோசடி செய்ததாகவும், இழந்த பணத்தை மீட்டுத்தருமாறும் மதுரையைச் சேர்ந்த நபர் ஒருவர் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், குற்றம் சுமத்தப்பட்டவர்களை கண்டுபிடிக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேற்படி இந்த வழக்கு விசாரணை குறித்து காவல் துறை வட்டாரங்கள் கூறுகையில், "குற்றச் சம்பவம் தொடர்பாக உடந்தையாக இருந்த நபர்கள் நாமக்கல் கணேசபுரத்தைச் சேர்ந்த நித்தீஷ்குமார், சந்திரசேகரன் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம் சவுரியார்பாளையத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பது தெரியவந்தது.
மேலும், நித்தீஷ்குமார் மூலமாக சைபர் குற்றவாளிகள் பொதுமக்களிடம் ஆன்லைன் பணமோசடி செய்வதற்கு உடந்தையாக இருந்ததும், இந்த வங்கி கணக்கு மூலம் ஒரு கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனைக்கு லட்சக்கணக்கில் பணம் கமிஷன் பெற்றதும் தெரியவந்தது.
இதனை அடுத்து, தனிப்படை போலீசார் நாமக்கல் மற்றும் கோயம்புத்தூர் சென்று குற்றம் சுமத்தப்பட்டவர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து குற்றச்செயலுக்கு பயன்படுத்திய லேப்டாப், செல்போன்கள், சிம்கார்டுகள், வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் ATM கார்டுகள் ஆகியவற்றை கைப்பற்றி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.