கோயம்புத்தூர்: 2025-26 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் அறிக்கை குறித்து பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளிக்கும் பொதுக் கூட்டம் கோவை தெற்கு மாவட்ட பா.ஜ.க சார்பில் சுந்தரபுரம் பகுதியில் நேற்று (பிப்.16) நடைபெற்றது. இதில் பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “ஆண்டிற்கு ரூ.12 லட்சம் வருமானம் பெறுபவர்கள் 60 முதல் 80 ஆயிரம் வரை வரி செலுத்த வேண்டும் நிலை இந்த பட்ஜெடில் இருந்து மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் கோடி வரை கடன் வழங்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.5 லட்சம் கோடி ரூபாய் வரை மத்திய அரசு கடன் தொகையை உயர்த்தி உள்ளது.
இந்தி திணிப்பு விவகாரம்: முதலமைச்சர் பொழுது போக்குவதற்காக இந்தி திணிப்பு போன்ற விஷயங்களை பிரச்சினையாக்கி வருகிறார். முதலமைருக்கு இந்தி தான் பிரச்சினை என்றால், அவர்கள் வைத்து நடத்தும் சன் சைன் பள்ளியில் மாணவர்களுக்கு ஹிந்தி சொல்லித் தரக் கூடாது. நீங்கள் நடத்தும் பள்ளியில் இந்தி இருக்கலாம். ஆனால், ஏழை எளியவர்கள் படிக்கும் அரசு பள்ளிகளில் இந்தி இருக்கக் கூடாதா? முதலில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
“ஏன் முதலமைச்சர் இதை கேட்கவில்லை?”
ஆனைமலை - நல்லார் திட்டம் நீண்ட நாளாக கிடைப்பில் உள்ளது. முதலமைச்சர் கேரள மாநிலத்திற்கு சென்ற போது ஏன் இதைப் பற்றி பேசவில்லை? அதே போல, கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு பகுதியில் 20 ஆயிரம் வீடுகள் உள்ளன. அந்த பகுதி மக்கள் வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. அந்த குப்பை கிடங்கால், நுரையீரல் தொற்று, மார்பக புற்றுநோய் போன்ற வியாதிகளால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதை பற்றி ஏன் எதுவும் கேட்கவில்லை.
“த.வெ.க விஜயின் பிள்ளைகள் எங்கு படிக்கிறது?”
தமிழ்நாட்டில் பேன்சி மூடநம்பிக்கை என்னவென்றால் மத்திய அரசிற்கு எதிராக பேச வேண்டும். அவ்வளவுதான். த.வெ.க விஜய் பிள்ளைகள் எங்கு படிக்கிறார்கள்? அவர் குழந்தைகளை அவர் அரசு பள்ளியில் படிக்க வைக்கவில்லையே? சமச்சீர் திட்டத்தில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் இந்தி கற்க கூடாது. ஆனால், அவர்களது குழந்தைகள் மட்டும் வேறு மொழிகள் கற்கலாம்.
இதையும் படிங்க: "யார் வேண்டுமானலும் எந்த மொழியை வேண்டுமானலும் கற்கலாம்!"- கனிமொழி விளக்கம்!
இருமொழி கொள்கையை ஆதரிப்பவர்கள் நாளை காலையிலேயே அவர்களது குழந்தைகளை மாநகராட்சி பள்ளியில் சேர்க்க வேண்டும். எந்த மாநிலத்திலும் மும்மொழி கொள்கைக்கு தடையில்லை. விஜய் குழந்தை, ஸ்டாலின், கனிமொழி ஆகியவர்களின் குழந்தைகள் வெளிநாட்டில் படித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களை, இங்கு கொண்டு வந்து மாநகராட்சி பள்ளியில் படிக்க வையுங்கள்" என்று கூறினார்.