செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ருத்ர கோட்டி. விவசாயியான இவர் தனது நிலத்தில் வேர்க்கடலை பயிர் செய்து வருகிறார். கடந்த சில மாதங்களாக கடுமையான மழைப்பொழிவு மற்றும் பனிப்பொழிவு ஏற்பட்ட காரணத்தால் தனது நிலத்தில் உள்ள பம்பு செட்டுகளை பத்திரமாக கோணிப் பைகளை வைத்து மூடியுள்ளார்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு வேர்க்கடலையை பயிரிட்டு அதற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மோட்டார் பம்புகளை சரி செய்துள்ளார். அப்போது மோட்டார் பம்பின் உள்ளிருந்து திடீரென சத்தம் கேட்டதால் என்ன சத்தம் என தெரியாமல் பதறிப்போனார்.
அருகே சென்று பார்த்த போது பம்ப்பின் உள்ளே அணில் குட்டிகளின் சத்தம் கேட்டுள்ளது. குட்டிகளை வெளியே எடுக்க நினைத்த ருத்ர கோட்டி பைப் உடைந்தாலும் பரவாயில்லை என பொருத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் பைப்பை அறுவை பிளேடு கொண்டு துண்டாக அறுத்துள்ளார்.
இதையும் படிங்க: வீட்டு வாசலில் இருந்த ஸ்கூட்டியை திருடி சென்ற மர்ம நபர்; காஞ்சிபுரம் போலீசார் விசாரணை!
பின்னர் அணில் குட்டிகளை பத்திரமாக உயிருடன் மீட்டெடுத்து அதன் தாயிடம் ஒப்படைக்க அருகே இருந்த புதரில் வேற எந்த மிருகமும் தொந்தரவு செய்யாமல் இருக்க பத்திரமாக அதன் கூடுடன் வைத்துள்ளார்.
சாதாரண நிகழ்வாக இருந்தாலும் விவசாயியின் இந்த செயல் காண்போரை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் விவசாயி ருத்ர கோட்டியை வெகுவாக பாராட்டி வருகின்றனர். மேலும், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.