தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கல்லூரி மாணவர்களே டார்கெட்.. கென்யா நாட்டுப் பெண் போதைப் பொருள் விவகாரத்தில் சிக்கியது எப்படி? - Kenya girl arrested in Drug Case - KENYA GIRL ARRESTED IN DRUG CASE

Drug Supply in Coimbatore: கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதைப் பொருள் சப்ளை செய்த கென்யா நாட்டு பெண் உட்பட மூன்று பேரை கோவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போதை பொருள் சப்ளையில் கைதான நபர்கள்
போதை பொருள் சப்ளையில் கைதான நபர்கள் (Credits - ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 7, 2024, 4:05 PM IST

கோயம்புத்தூர்:கோவையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களைக் குறிவைத்து மெத்தம்பெட்டமின் போதை மருந்து சப்ளை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில், போதைப் பொருட்களை சப்ளை செய்யும் கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தனிப்படையினர் நடத்திய விசாரணையில், கவுதம், அபிமன்யு, பாசில், முகமது அர்சித், இஜாஸ், பெவின் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களிடம் இருந்த 102 கிராம் மெதாம்பெட்டமின் போதை மருந்தும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில், கைதான நபர்களுக்கு திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரவீன் குமார் மற்றும் கோவை மாவட்டம் ராமநாதபுரத்தைச் சேர்ந்த வினோத் ஆகியோர் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு, தார்வார் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கடத்தி வந்து சப்ளை செய்யப்பட்டது தெரிய வந்தது.

அதையடுத்து, பிரவீன்குமார், வினோத் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தியபோது, போதை மருந்து கடத்தலுக்கு முக்கியப் புள்ளியாக செயல்பட்டது கென்யா நாட்டைச் சேர்ந்த இவி பொனுகே (26) என்ற பெண் என்பது தெரியவந்தது. பின்னர் அவரை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், இவி பொனுகே பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது கூட்டாளியான உகாண்டா நாட்டைச் சேர்ந்த காவோன்கே என்பவரைச் சந்திக்கச் சென்றுள்ளார். அப்போது, அவரைக் கண்காணித்து வந்த கோவை தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். பின்னர், அவரை கோவை கொண்டு வந்து விசாரணை செய்த போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அந்த விசாரணையில், கைதான கென்யா பெண் இவி பொனுகே, தார்வார் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் சட்டக்கல்வி படிப்பதற்காக தங்கியுள்ளதாகவும், இன்னும் அவர் படிப்பை முடிக்கவில்லை என்றும், மேலும் அவரது விசா காலாவதியானதும் தெரிய வந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, தார்வார், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் தங்கி இருந்துகொண்டு ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டு, போதை மருந்து சப்ளை செய்துள்ளார். அதுமட்டுமின்றி, உகாண்டா நாட்டைச் சேர்ந்த அவரது கூட்டாளி காவோன்கே சிறையிலிருந்து கொண்டே செல்போன் மூலம் வரும் தகவலின் அடிப்படையில், அந்தந்த இடங்களுக்கு கென்யா பெண் மூலம் போதை மருந்தை அனுப்பி வைத்துள்ளார்.

அதுவும் சாமர்த்தியமாக நேரடியாக கொடுக்காமல், ஆன்லைன் மூலம் பணத்தை பெற்றுக் கொண்டு, போதை மருந்து வைக்கப்பட்டு இருக்கும் இடத்தை லொக்கேசன் மூலம் அனுப்பி எடுத்துக் கொள்ளச் செய்துள்ளனர். அப்போது, போதை மருந்தை வாங்க வரும் நபர்கள் செல்போன் லொக்கேசன் அடிப்படையில் சென்று, அங்கு ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் போதை மருந்தை எடுத்துச் செல்வதை வழக்கமாக கொண்டிருப்பதாக, கைதான கென்யா பெண் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இதில் கிடைக்கும் பணத்தை கென்யா பெண் இவி பொனுகே, உகாண்டா நாட்டைச் சேர்ந்த மற்றொரு நண்பரான டேவிட் என்பவர் டெல்லியில் தொடங்கி வைத்திருந்த வங்கிக் கணக்கிற்கு அனுப்பி, அதன் மூலம் பணம் சம்பாதித்து வந்துள்ளார். தற்போது வரை இந்த கணக்கில் ரூ.49 லட்சம் இருந்துள்ளது. அதனை முடக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது, பெங்களூரு சிறையிலிருந்து கொண்டே போதை மருந்து கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டு வரும் காவோன்கே என்பவரை கர்நாடக போலீசார் மூலம் கைது செய்யவும், கோவை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கைதான கென்யா பெண் உள்பட மூன்று பேரும் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: சென்னை சென்ட்ரலில் பயணியின் கைப்பையை நைசாக லவட்டி சென்ற நபர்... போலீசில் சிக்கியது எப்படி?

ABOUT THE AUTHOR

...view details