தூத்துக்குடி: இரு மடங்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுவது, ஊழியர் பற்றாக்குறை மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தை கண்டித்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மற்றும் லாரி புக்கிங் ஏஜென்ட் சங்கத்தினர் லாரிகளை சுங்கச்சாவடியில் நிறுத்தி மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
போராட்டம் குறித்து லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் ஜெகன் பெரியசாமி மற்றும் லாரி புக்கிங் ஏஜென்ட் சங்கத் தலைவர் சுப்புராஜ் கூறியதாவது, “தூத்துக்குடி புதூர் பாண்டிபுரம் பகுதியில் அமைந்துள்ளது, தேசிய நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான சுங்கச்சாவடி. இந்த சுங்கச்சாவடியை தனியார் நிறுவனம் ஒப்பந்தம் மூலம் எடுத்து நடத்தி வருகிறது. இவை, மாநகராட்சி எல்லையை தாண்டி 15 கிலோமீட்டர் தூரம் இருக்க வேண்டும் என்ற விதிமுறைகளை மீறி, இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சுங்கச்சாவடியில் அனைத்து கவுண்டர்களும் செயல்படாமல், ஊழியர் பற்றாக்குறை காரணமாக இரண்டு கவுண்டர்கள் மற்றும் செயல்படுவதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இங்கு வாகன ஓட்டிகளுக்கு தேவையான குடிநீர், சுகாதார வசதி உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத சூழ்நிலை உள்ளது.
தொடர்ந்து, சுங்கச்சாவடிக்கு வரும் லாரிகளுக்கு 24 மணி நேரத்திற்கு ஒரு கட்டணம் இல்லாமல், இரண்டு முறை கட்டணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக லாரி உரிமையாளர்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னைகள் தொடர்பாக ஏற்கனவே உரிய நடவடிக்கை எடுக்க கோரி சுங்கச்சாவடியை நடத்தி வரும் நிறுவனத்திடம் தூத்துக்குடி லாரி உரிமையாளர் சங்கத்தினர் மற்றும் லாரி புக்கிங் ஏஜெண்ட் அசோசியேஷன் சார்பில் பலமுறை புகார் அளிக்கப்பட்டும், அந்த நிறுவனம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை” இவ்வாறு கூறினார்.