தேனி:ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, கடந்த 2019ஆம் ஆண்டு தேனியை சேர்ந்த எட்டு இளைஞர்களிடம் இருந்து ஒரு கோடியே 11 லட்சத்து 89 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை பெற்று ஏமாற்றிய சென்னையைச் சேர்ந்த பூகீஸ்வரனை தேனி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியகுளம் அருகே தென்கரை பகுதியில் வசித்து வருபவர் சிவபாலன் (வயது 27). இவரின் உறவினரான தேனி ரத்தினம் நகர் அருகே உள்ள ஜெயம் நகர்ப் பகுதியைச் சேர்ந்த குகன்ராஜா, அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி கடந்த 2019ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த பூகீஸ்வரன் மற்றும் அவரது மனைவி ஜெயஸ்ரீ ஆகியோரை சிவபாலனுக்கு அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.
பூகீஸ்வரன் மற்றும் அவரது மனைவி ஜெயஸ்ரீ ஆகியோர் தங்களுக்கு ரயில்வே துறையில் உயர் அதிகாரிகளைத் தெரியும் என்றும் அவர்கள் மூலம் ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனை நம்பிய சிவபாலன் மற்றும் அவருடன் அவரது நண்பர்கள் எட்டு பேர் ரயில்வே பணி வேலைக்காகப் பணத்தைக் கொடுத்துள்ளனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு ஒரு கோடியே 11 லட்சத்து 89 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தைக் குகன் ராஜா, பூகீஸ்வரன், ஜெயஸ்ரீ ஆகிய மூன்று பேரிடம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. பணத்தைப் பெற்றுக் கொண்ட அவர்கள் ரயில்வே துறையில் வேலைக்கான நியமன ஆணையை வழங்கியதாக கூறப்படுகிறது.