தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு - மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்டமனூர் ஊராட்சியில் உள்ள 12 வார்டுகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர்.
கண்டமனூர் ஊராட்சியில் கண்டமனூர், ஆத்துக்காடு, ஏழாயிரம் பண்ணை, புது ராமச்சந்திராபுரம் ஆகிய கிராமங்களில் கடந்த 4 ஆண்டுகளாக முறையாகக் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்றும், 15 நாட்களுக்கு ஒருமுறையே விநியோகிக்கப்படும் குடிநீர் போதுமான அளவு விநியோகிக்கப்படாமல் பற்றாக்குறையாக விநியோகிக்கப்படுகிறது என்றும் புகார் கூறப்படுகிறது.
அதேபோல் கிராமத்தில் மகளிர் சுகாதார வளாகம், கழிவுநீர் வாய்க்கால், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும். தினமும் கழிவுநீர் வாய்க்கால்களைத் தூர்வார வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகளைப் பல ஆண்டுகளாகக் கிராம மக்கள் வலியுறுத்தியும் செய்து தரப்படவில்லை எனக் கிராம மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
குடிநீர்ப் பற்றாக்குறையை கண்டமனூர் ஊராட்சி நிர்வாகம் சரிசெய்ய முடியாததால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 36 லட்ச ரூபாய் செலவில் 2 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி கட்டப்பட்டது. அந்த மேல்நிலைத் தொட்டி பணிகளும் சரிவரக் கட்டப்படாமல் சோதனை ஓட்டத்தின் போது தண்ணீர் கசிந்ததால் தற்போது வரை அது பயன்பாட்டிற்கு வரவில்லை. அதனால் கண்டமனூர் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு தொடர்கிறது.