தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரியின் சிறை தண்டனையை உறுதி செய்தது சென்னை ஐகோர்ட்! - ex minister Indira Kumari case - EX MINISTER INDIRA KUMARI CASE

AIADMK ex minister Indira Kumari case: ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உள்ளிட்டோருக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் -கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம் -கோப்புப்படம் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2024, 2:58 PM IST

சென்னை: தமிழக சமூக நலத்துறை அமைச்சராக 1991 – 1996 காலக்கட்டத்தில் இருந்தவர் இந்திரகுமாரி. அந்த காலகட்டத்தில், அவருடைய கணவர் பாபு நிர்வாக அறங்காவலராக இருந்த அறக்கட்டளைக்கு, வாய் பேச முடியாத, காது கேட்காத குழந்தைகளுக்கான பள்ளி துவங்குவதற்காக சமூக நலத்துறை சார்பில் 15 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிதியின் மூலம் குழந்தைகளுக்கு எந்த நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படவில்லை என்று சமூக நலத்துறையின் அப்போதைய செயலாளர் லட்சுமி பிரானேஷ் அளித்த புகாரின் பேரில், இந்திரகுமாரி, அவரது கணவர் பாபு, கிருபாகரன் (இறந்துவிட்டார்), சண்முகம், வெங்கட கிருஷ்ணன் ஆகிய 5 பேர் மீது ஊழல் தடுப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்த்தில் நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, அவரது கணவர் பாபுவுக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஊனமுற்றோர் மறுவாழ்வுத் துறையின் முன்னாள் செயலர் சண்முகத்திற்கு மூன்றாண்டு சிறை தண்டனையும் விதித்து 2021ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

குற்றம்சாட்டப்பட்ட கிருபாகரன் இறந்துவிட்டதால் அவர் மீதான குற்றச்சாட்டுகளை கைவிட்ட சிறப்பு நீதிமன்றம், வெங்கடகிருஷ்ணன் என்பவரை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து இந்திரகுமாரி உட்பட மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர்.

இந்த மனு நிலுவையில் இருந்தபோது, கடந்த ஏப்ரல் மாதம் இந்திரகுமாரி காலமானார். மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்த நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி இறந்துவிட்டதால் அவரை மட்டும் விடுவித்தும் மற்ற அனைவருக்கும் விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்தும் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:விஜய் பட தலைப்பில் 'சனாதனம்'? - விசிக எம்பி ரவிக்குமார் விமர்சனம்

ABOUT THE AUTHOR

...view details