தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் பசுமை பரப்பை அதிகரிக்க மரக்கன்றுகள் நடப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகிறது. தருமபுரி வனச்சரக எல்லைக்குட்பட்ட தொப்பூர் காப்புக்காடு, பாளையம் புதூர் காமராஜ் நகர் உள்ளிட்ட பகுதியில் வனத்துறை சார்பில் ஈட்டு நிலத்தோட்டம் திட்டத்தின் மூலம் சுமார் 12.75 ஹெக்டேர் பரப்பளவில் புங்கன், ஆயான், தேக்கு, வேம்பு, காட்டு நெல்லி, ஜம்பு நாவல், ஈட்டி, கொட்டை நாவல், இலுப்பை, அரசு, வில்வம், அத்தி, ஆல், நீர் மருது, விளா என 15க்கும் மேற்பட்ட வகைகளில் 6,375 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று நூலஅள்ளி மற்றும் ரெட்டிஅள்ளி காப்புக்காட்டில் 100 ஹெக்டேர் பரப்பளவிலும், ஏலகிரி காப்புக்காட்டில் 75 ஹெக்டேரிலும், பரிகம் காப்புக்காட்டில் 250 ஹெக்டேர், பெரும்பாலை காப்புக்காட்டில் 175 ஹெக்டேர், தொப்பூர் காப்புக்காட்டில் 100 ஹெக்டேர் என மொத்தம் 700 ஹெக்டேர் பரப்பளவில் செம்மரம், தேக்கு, ஈட்டி, பரம்பை, குடைவேல், காட்டு நெல்லி, வேங்கை, வாகை, விளா, அத்தி என 22 வகையான 70,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஏலகிரி காப்புக்காட்டில் நபார்டு திட்டத்தின் மூலம் 50 ஹெக்டேர் பரப்பளவில் செம்மரம் 10,000 மரக்கன்றுகளும் கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடவு செய்யப்பட்டுள்ளது. இந்த மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்ட காலத்தில் இருந்து பருவ மழை பொய்த்த நிலையில் மரக்கன்றுகள் கருகாமல் இருக்க வனத்துறை சார்பில் கூலி ஆட்கள் மூலம் மாதத்திற்கு 5 முறை டிராக்டர்கள் மூலம் தண்ணீர் ஊற்றி வந்தனர்.