தஞ்சாவூர்: இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட தஞ்சையை அடுத்த கரந்தையில் அருள்மிகு பெரியநாயகி அம்பாள் உடனுறை கருணாசாமி திருக்கோயில் என்கிற அருள்மிகு வசிஷ்டேஸ்வர சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
கரந்தை கருணாசாமி கோயில் திருவிழா (Credits - ETV Bharat Tamil Nadu) இந்த கோயில், தேவாரப்பாடல் பெற்ற வைப்பு தலமாகவும் விளங்கி வருகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட தலமாகவும், கரிகால் சோழ மன்னனுக்கு அருள்பாலித்து ஸ்ரீ வசிஷ்ட மகா முனிவரால் பூஜிக்கப்பட்ட தலமாகவும் விளங்கி வருகிறது.
இத்தகைய பிரசித்தி பெற்ற இக்கோயிலில் வைகாசி மாத உற்சவம் கடந்த 9ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. இதனை அடுத்து விழாவில், கண்ணாடி பல்லாக்கு மற்றும் வெட்டிவேர் பல்லாக்கு ஆகியன ஏழு ஊர்களை சுற்றிவரும் விழா 24ஆம் தேதி நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து, கண்ணாடி பல்லாக்கு ஏழூர் சுற்றி கோவிலுக்கு வந்ததும் நேற்று (மே 25) 'பொம்மை பூ போடும் நிகழ்ச்சி' நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி பல்லாக்கில் ஸ்ரீ சோமாஸ்கந்தர், ஸ்ரீ பெரியநாயகி அம்மன், ஸ்ரீ கந்தர் மற்றும் ஸ்ரீ தனி அம்மன் ஆகிய சுவாமிகள் எழுந்தருளினர்.
அதேபோல, வெட்டிவேர் பல்லாக்கில் ஸ்ரீ வசிஷ்டர், ஸ்ரீ அருந்ததி அம்மன் ஆகிய சுவாமிகள் எழுந்தருளினர். அப்போது பக்தர்களின் கோஷங்களுக்கிடையே சுவாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக சுவாமிகளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இதுமட்டும் அல்லாது, சிவகணங்கள் மங்கல வாத்தியங்கள் இசைக்க, பக்தர்கள் கண்ணாடி பல்லாக்கு மற்றும் வெட்டிவேர் பல்லாக்கினை தோளில் சுமந்தபடி கோயிலில் வலம் வந்தனர். மேலும், பிரசித்தி பெற்ற இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க:யானைகள் கணக்கெடுப்பு நிறைவு: தமிழ்நாடு உள்பட 4 மாநில யானைகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?