பொள்ளாச்சி: பசுமைக்கு பெயர் போன பொள்ளாச்சி தொகுதி, ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே கோவை மாவட்டத்தின் வருவாய் கோட்டமாக உருவாக்கப்பட்டது. 1977ம் ஆண்டு முதல் தனித்தொகுதியாக இருந்த பொள்ளாச்சி, தொகுதி மறுசீரமைக்கு பின் 2009ம் ஆண்டு பொது தொகுதியாக மாற்றப்பட்டது. தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி,வால்பாறை (தனி), உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் என ஆறு சட்டமன்ற தொகுதிகளை பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி உள்ளடக்கியுள்ளது.
அதிமுக ஆதிக்கம்:இதுவரை நடைபெற்றுள்ள தேர்தல் முடிவுகளின்படி,பொள்ளாச்சி அதிமுக வலுவாக உள்ள தொகுதியாக உள்ளது. அதிமுக இங்கு இதுவரை ஏழு முறை வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியை திமுக கைப்பற்றியது.
இத்தொகுதியில் கோவையின் தொண்டாமுத்தூர் பகுதியும் இணைந்துள்ளதால், கோவையின் சமூக சூழல் மற்றும் அரசியல் தாக்கம் கொண்ட தொகுதியாகவும் பொள்ளாச்சி உள்ளது.
வாக்காளர் எண்ணிக்கை: கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில், இத்தொகுதியில் மொத்தம்7 லட்சத்து 66 ஆயிரத்து 77 ஆண் வேட்பாளர்களும், 8 லட்சத்து 54 ஆயிரத்து 428 பெண் வேட்பாளர்களும், 290 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 15 லட்சத்து 817 ஆயிரத்து 95 வேட்பாளர்கள் இருந்தனர்.
திமுக வெற்றி:அத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கே.சண்முக சுந்தரம் 5 லட்சத்து 54 ஆயிரத்து 230 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் மகேந்திரன், 3 லட்சத்து 78 ஆயிரத்து 347 வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பெற்றார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூகாம்பிகை 59 ஆயிரத்து 693 வாக்குகளையும். நாம் தமிழர் கட்சியின் சனுஜா 31 ஆயிரத்து 483 வாக்குகளையும் பெற்றனர்.
இம்முறை களத்தில் உள்ளவர்கள்:2024 நாடாளுமன்ற தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் திமுக சார்பில் ஈஸ்வர சுவாமி, அதிமுக சார்பில் கார்த்திகேயன், பாஜக சார்பில் வசந்த ராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் சுரேஷ்குமார் போட்டியிடுகின்றனர். திமுகவின் சிட்டிங் எம்.பியாக உள்ள கே.சண்முக சுந்தரத்திற்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகரித்த வாக்குப்பதிவு:2024 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் 11 லட்சத்து 24 ஆயிரத்து 743 வாக்குகள் என மொத்தம் 70.41 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2019 இல் மொத்தம் 63.9 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இம்முறை ஏழு சதவீதத்துக்கும் மேல் வாக்குப்பதிவு அதிகமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக தீவிர பிரச்சாரம்: அதிமுக எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன்,கிணத்துக்கடவு தாமோதரன்,மடத்துக்குளம் மகேந்திரன்,வால்பாறை அமுல் கந்தசாமி,உடுமலை ராதாகிருஷ்ணன்,எஸ் பி வேலுமணி உள்ளிட்ட அதிமுக முக்கியப் பிரமுகர்கள், தேர்தலுக்கு பல மாதங்களுக்கு முன்பே கட்சித் தொண்டர்களை தேர்தல் பணிக்கு அனுப்பி வைத்தனர். கடந்த அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்தும், அத்திட்டங்கள் கடந்த மூன்று ஆண்டுகால திமுக ஆட்சியில் எவ்வாறு முடக்கப்பட்டுள்ளன என்றும் தொகுதி மக்களுக்கு எடுத்துரைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
திமுக வேட்பாளர் ஈஸ்வர சுவாமிக்கு அமைச்சர் சக்கரபாணி உள்ளிட்ட கட்சியில் முக்கிய பொறுப்பு வைக்கும் நிர்வாகிகள் தேர்தல் பணியாற்றினர். இதர கட்சியினர் சொல்லிக் கொள்ளும்படியாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யாருக்கு வெற்றி?: அதிமுக vs திமுக என இருமுனைப் போட்டி நிலவிவரும் பொளாச்சியில் வெற்றியை தக்கவைக்குமா திமுக? இழந்த தொகுதியை மீட்குமா அதிமுக? என்ற கேள்விகளுக்கான விடை ஜுன் 4 ஆம் தேதி தெரிந்துவிடும்.
இதையும் படிங்க: தேர்தல் 2024: கோயில் நகரமாம் காஞ்சிபுரத்தில் வெற்றிக்கொடி நாட்டப் போவது யார்? - LOK SABHA ELECTION 2024