சென்னை: வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு நடைமுறைகள் முடிந்த பிறகு தான் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் 2019ஆம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது தேர்வு செய்யப்பட்டவர்களின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 5ஆம் தேதியுடன் முடிவடைகிறது. பதவிகாலம் முடிய இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் இனி தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை. தேர்தல் நடத்துவதற்கு 45 நாட்களுக்கு முன்பு, மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்படும். ஆனால், அப்படி எந்த ஏற்பாடுகளும் நடப்பதாக தெரியவில்லை.
இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முனியன் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், "தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் முடிவடைய உள்ளன. எனவே உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு எல்லை மறு வரையறை பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கும்படி மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும், மேலும், உள்ளாட்சி அமைப்புகளில் பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் மகளிருக்கு ஒதுக்கப்படும் வார்டுகள் குறித்து முடிவு செய்த பிறகே உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட உத்தரவிட வேண்டும்," எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ். எஸ்.சுந்தர், பி.தனபால் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் மற்றும் மாநில தேர்தல் ஆணைய வழக்கறிஞர் ஆகியோர், "வார்டு மறு வரையறை மற்றும் மதிப்பீட்டு பணிகள், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் மற்றும் மகளிருக்கான இட ஒதுக்கீடு குறித்து முடிவு செய்யாமல், உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட மாட்டாது,"என உத்தரவாதம் அளித்தனர். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
2019ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுப்பவர்களின் பதவி காலம் முடிவடைவதை ஒட்டி அந்த உள்ளாட்சிகளின் நிர்வாக பொறுப்புகளை கவனிக்க தமிழக அரசின் சார்பில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். அதற்கு சட்டப்பேரவையின் ஒப்புதல் தேவை. எனவே வரும் 6ஆம் தேதி கூட உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்று தெரிகிறது.