பெரம்பலூர்:கடந்த1995 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளியிலிருந்து பிரிந்து பெரம்பலூர் மற்றும் கரூர் ஆகிய புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. பெரம்பலூர் மாவட்டம் வடக்கே கடலூர் மற்றும் சேலம் மாவட்டங்களையும், தெற்கே திருச்சிராப்பள்ளி, கிழக்கே அரியலூர், மேற்கே திருச்சிராப்பள்ளி மற்றும் சேலம் மாவட்டத்தை எல்லைகளாக கொண்டுள்ளது.
தமிழ்நாட்டில் விளைவிக்கப்படும் மொத்த சிறிய வெங்காய உற்பத்தியில் 24% பெரம்பலூர் மாவட்டத்தில் விளைவிக்கப்படுகிறது. மாநிலத்தில் சின்ன வெங்காய உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.
தொகுதிகள்:பெரம்பலூர் மக்களவைத் தொகுதி பெரம்பலூர், மண்ணச்சநல்லூர், துறையூர் (தனி), லால்குடி, முசிறி, குளித்தலை என ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.
2019 இல் வாக்குப்பதிவு எவ்வளவு?: கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இத்தொகுதியில் மொத்தம் 13,91,011 வாக்காளர்கள் இருந்தனர். இவர்களில் ஆண்கள் 6,78,452, பெண்கள் 7,12,477, மூன்றாம் பாலின வாக்காளர்கள் 82 பேர் அடங்குவர். இவர்களில் மொத்தம் 11,02,767 பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்திருந்தனர். மொத்த வாக்குப்பதிவு 80.9 சதவீதமாகும்.
திமுக கூட்டணியில் போட்டியிட்ட ஐஜேகே கட்சித் தலைவர் டி.ஆர்.பாரிவேந்தர் 6,83,697 வாக்குகள் பெற்று 4,03,518 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட என்.ஆர். சிவபதிக்கு 2,80,179 வாக்குகள் கிடைத்தன. நாம் தமிழர் கட்சியின் சாந்தி 53,545 வாக்குகளும், சுயேச்சையாக போட்டியிட்ட எம்.ராஜசேகரன் 45,591 வாக்குகள் பெற்றார்.
2024 இல் குறைந்த வாக்குப்பதிவு: கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்ற,2024 நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவில் இத்தொகுதியில் மொத்தமுள்ள 14,46,352 வாக்காளர்களில் (ஆண்கள் 7,01,400, பெண்கள் 7,44,807, மூன்றாம் பாலினத்தவர் 145) 11,19,881 பேர் வாக்களித்திருந்தனர். மொத்த வாக்குப்பதிவு 77.43% சதவீதமாகும்.
மாறிய களம்:கடந்த முறை திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்ட இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் இம்முறை பாஜக கூட்டணியில் போட்டியிடுகிறார்.
திமுக வேட்பாளரின் பிரதான வாக்குறுதி:திமுக சார்பில் அருண் நேரு, அதிமுக சார்பில் என்.டி.சந்திரமோகன், நாதக சார்பில் ஆர்.தேன்மொழி ஆகியோர் போட்டியிடுகின்றனர். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். தான் வெற்றி பெற்றால், முதல் வேலையாகப் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு ரயில் நிலையத்தைக் கொண்டுவர அரசை வலியுறுத்துவேன் என்ற வாக்குறுதியை திமுக வேட்பாளர் தமது தேர்தல் பரப்புரையில் பிரதானமாக அளித்தார். அத்துடன் சுகாதாரம் வசதிகள் மற்றும் வேலைவாய்ப்பை பெருக்குவேன் என்றும் தொகுதி மக்கள் மத்தியில் அவர் வாக்குறுதி அளித்தார்.
பாரிவேந்தரின் சென்ட்மென்ட் பேச்சு:பணம் சம்பாதிக்க சிலர் அரசியலுக்கு வரும் நிலையில், தான் கடந்த 5 ஆண்டுகளில், தனது சொந்த நிதி ரூ.126 கோடியை தொகுதி மக்களுக்காக செலவழித்திருக்கிறேன் என டச்சிங்காக பேசி ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் மக்களிடம் வாக்கு சேகரித்தார். இவரை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார்.
அதிமுக வேட்பாளரின் அசத்தல் வாக்குறுதிகள்: அதிமுக வேட்பாளர் சந்திரமோகன், பெரம்பலூரில் கிடப்பில் போடப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திட்டத்தைச் செயல்படுத்தவும், வாழை பதனிடும் தொழிற்சாலை அமைக்கவும், பெரம்பலூர் வழியாக ரயில் பாதை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்வேன் எனக் கூறி தொகுதி மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
இவருக்கு ஆதரவாக உள்ளூர் அதிமுக பிரபலங்களான முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, வரகூர் அருணாசலம், பரஞ்ஜோதி ஆகியோர் பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
நாதக வேட்பாளரின் நூதன பிரச்சாரம்:நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.தேன்மொழி வீடு வீடாகச் சென்றும், பிரச்சாரத்துக்குச் செல்லும் இடங்களில் விவசாயக் கூலித் தொழிலாளர்களுடன் வயலில் களை பறித்தும், நாற்று நட்டும் வாக்கு சேகரித்தார். இவருக்கு ஆதரவாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
கள நிலவரம்:கடந்தமுறை திமுக கூட்டணியில் ஐஜேகே சார்பில், போட்டியிட்ட பாரிவேந்தர் தற்போது திமுகவிலிருந்து விலகி பாஜக கூட்டணியில் போட்டியிட்டுள்ளார். திமுக சார்பில் போட்டியிட்டுள்ள அருண் நேருவிற்கு பெரும் படையே பிரச்சாரம் செய்துள்ளது. இத்தொகுதியில், திமுக, பாஜகவிற்கு இடையே இருமுனை போட்டி நிலவுகிறது. இப்போட்டியில் வெல்லப் போவது யாரென்பது ஜூன் 4 ஆம் தேதி தெரிந்துவிடும்.
இதையும் படிங்க:தேர்தல் 2024: அதிமுக Vs திமுக; பொள்ளாச்சியில் கோலோச்ச போவது யார்? - LOK SABHA ELECTION 2024