காஞ்சிபுரம்: தமிழ்நாட்டின் 5வது நாடாளுமன்றத் தொகுதியாக ஸ்ரீபெரும்புதூர் அமைந்துள்ளது. ஸ்ரீபெரும்புதூர் (தனி), மதுரவாயல், அம்பத்தூர், பல்லாவரம், தாம்பரம், ஆலந்தூர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.
2024 இல் வாக்குப்பதிவு எவ்வளவு?:ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் மொத்தம் 23,82,119 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 11,80,263, பெண் வாக்காளர்கள் 12,01,427 மற்றும் மூன்றாம் பாலின வாக்காளர்கள் 429 பேரும் அடங்குவர்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 14,35, 243 பேர் தங்கள் வாக்கினைப் பதிவு செய்த நிலையில், மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 60.25 ஆக உள்ளது. இது கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை விட 2% குறைவாகும்.
திமுக அபார வெற்றி:கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, பாமக (அதிமுக கூட்டணி), நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மையம் என நான்குமுனை போட்டி நிலவியது. அப்போது ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 22,53,041. இவர்களில் ஆண்கள் 11,22,731, பெண்கள் 11,29,970 மூன்றாம் பாலினத்தவர் 340 உள்ள நிலையில், 14,06,782 வாக்குகள் (65.7%) பதிவாகின.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில், திமுகவைச் சேர்ந்த டி.ஆர்.பாலு 7,93,281 வாக்குகளை குவித்தார். பாமகவைச் சேர்ந்த வைத்தியலிங்கம் 2,85,326 வாக்குகளை அள்ளினார். மக்கள் நீதி மையம் கட்சியைச் சேர்ந்த ஸ்ரீதர் 1,35,525 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மகேந்திரன் 84,979 வாக்குகளையும் பெற்றனர். திமுகவைச் சேர்ந்த டி.ஆர்.பாலு 5,07,955 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்தமுறை கள நிலவரம் என்ன? : 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி என மும்முனை போட்டி நிலவுகிறது. இதில், திமுக சார்பில் தற்போது சிட்டிங் எம்.பியாக இருக்கக்கூடிய டி.ஆர்.பாலுவே மீண்டும் களம் இறங்கியுள்ளார். அதிமுக சார்பில் மருத்துவர் பிரேம்குமார், பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் வேணுகோபால், நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் ரவிச்சந்திரன் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.