தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு நாள்; ஸ்டாலின் முதல் விஜய் வரை அரசியல் தலைவர்கள் வாழ்த்து! - TAMIL NADU FORMATION DAY

இந்தியா மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்ட நவம்பர் 1ஆம் தேதியை தமிழ்நாடு உருவான நாளாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பல தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு நாள் வாழ்த்துகள் கூறும் அரசியல் தலைவர்கள்
தமிழ்நாடு நாள் வாழ்த்துகள் கூறும் அரசியல் தலைவர்கள் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 1, 2024, 5:21 PM IST

சென்னை:இந்திய விடுதலைக்குப் பிறகு மொழி வழியில் மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. ஆனால், அதை மத்திய அரசு ஏற்க மறுத்த நிலையில் பல்வேறு போராட்டங்களைக் கடந்து 1 நவம்பர் 1956-இல் இந்தியா மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது.

தமிழ்நாடு நாள்:இந்நிலையில், சென்னை மாநிலத்தை மொழிவாரியாக பிரித்த நாளான நவம்பர் 1ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடுவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு, 2019ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி வெளியிட்டது. இந்நிலையில், தமிழ்நாடு நாள் வாழ்த்துகளை பல அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் அவர் கூறியதாவது, “தெற்கிலும், வடக்கிலும் பல இடங்களில் போராடி தமிழ்நாட்டின் எல்லையைக் காத்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் நாள், நவம்பர் 1. தமிழர் வாழும், தமிழ் பேசப்படும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைப்பதற்காகப் போராடிய அனைவரையும் எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளில் போற்றி வணங்குகிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

எடப்பாடி பழனிசாமி:அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், “ இந்நாளை "தமிழ்நாடு நாள்" என்று எனது தலைமையிலான அம்மாவின் அரசு அறிவித்ததை பெருமிதத்துடன் நினைவுகூர்ந்து, அனைவருக்கும் இனிய தமிழ்நாடுநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், தீயசக்தியின் விடியா ஆட்சியில் சிக்கியுள்ள நம் தமிழ்நாட்டை விரைவில் மீட்டு, பாரதியின் கூற்றைப்போல் "வான்புகழ் கொண்ட" தமிழ்நாடாக மீண்டும் மிளிரச் செய்திட உறுதியேற்போம்” என குறிப்பிட்டிருந்தார்.

வாழ்த்து தெரிவித்த ராமதாஸ்:பாமக நிறுவனர் ராமதாஸ், “தமிழ்நாடு நாளில், தமிழர்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க வளர்ச்சி மாடை உருவாக்க உறுதி ஏற்க வேண்டும். சென்னை மாகாணம் என்ற பெயரிலான பெரு நிலப்பரப்பு 68 ஆண்டுகளுக்கு முன்பு நவம்பர் ஒன்றாம் நாளான இதே நாளில் தான் மொழிவாரி மாநிலங்கள் தத்துவத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு, இன்றைய தமிழ்நாடு உருவாக்கப்பட்டது. அந்த வகையில் நவம்பர் ஒன்றாம் தேதி தான் உண்மையான தமிழ்நாடு நாள்.

மொழிவாரி மாநிலங்களால் நாம் அடைந்ததை விட இழந்தது அதிகம். நாம் இழந்த உரிமைகள் உள்ளிட்ட அனைத்தையும் மீட்டெடுக்க இந்த நாளில் உறுதியேற்போம்” என தனது தமிழ்நாடு தின வாழ்த்துக்களை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க:'விஜய் அரசியல் வருகை இந்தியா கூட்டணிக்கு லாபம்'.. என்ன சொல்கிறார் செல்வப்பெருந்தகை..?

அண்ணாமலை:பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “ நம் தமிழ் மொழிக்கான மாநிலமாக, இன்றைய எல்லைப் பகுதிகளோடு நம் மாநிலம் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு தினமான இன்று, தமிழக மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

மொழி வாரியாக மாநிலங்களின் எல்லைகள் வரையறுக்கப்பட்டு, குமரி முதல் சென்னை வரை தமிழ் மொழி பேசும் பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்ட பெருமை மிகுந்த தினமான இன்று, தெருவுக்குத் தெரு மதுக் கடைகளைத் திறந்து வைத்தும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தும், கையாலாகாத திமுக அரசால் தனது பொலிவை இழந்து நிற்கும் தமிழகம் தன் பெருமையை மீட்டெடுக்க, உறுதியேற்போம்” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்:நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட வாழ்த்தில், “தமிழ்நாடு என்கின்ற நம் உயிரினும் மேலான நமது தாயக நிலம் இந்திய ஒன்றிய அரசால் தனித்த மொழிவழி மாநிலமாக அங்கீகரிக்கப்பட்ட நாளையே தமிழ்நாடு நாளாக போற்றிக்கொண்டாடிட வேண்டியது ஒவ்வொரு தமிழரின் இனமானக்கடமையாகும்”.

தவெக தலைவர் விஜய்:மேலும் தவெக தலைவரான நடிகர் விஜய், “1956இல் மொழிவாரி மாகாணங்கள் அமைக்கப்பட்டதன் மூலம், நம்முடைய மாநிலம் நிலப்பரப்பு அளவில், தனி மாநிலமாக உருவெடுத்த தினம் இன்று மதராஸ் மாகாணமாக இருந்த நமது மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரி, தியாகி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்து உயிரும் துறந்தார்.

இதைத் தன் இதயத்தில் தாங்கிய, கனிவின் திருவுருவம் பேரறிஞர் பெருந்தகை அண்ணா, தான் ஆட்சிக்கு வந்ததும் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி, தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழர் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கப் போராட்டம் நடத்திய எல்லைப் போராளிகளின் தியாகங்களையும் இன்னாளில் நினைவு கூருவோம். தியாகப் பெரும் பின்னணியில் தமிழர்களுக்கு என்று ஒரு தனி மாநிலம் பிறந்த இந்த நாளை (நவம்பர் 1) வரலாற்று நினைவுகளுடன் தமிழ்நாடு தினமாகப் போற்றி மகிழ்வோம்” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

ஈடிவி பாரத் தமிழ் நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்.

ABOUT THE AUTHOR

...view details