சென்னை: நாகப்பட்டினத்தில் உள்ள கீழ்வெண்மணிக்கு நேற்று (ஜன. 28) சென்று இருந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி, அங்குள்ள கிராமங்கள் வறுமையில் உள்ளதாகவும், பிரதமரின் வீடு கட்டும் திட்டம் தொடர்பாக தமிழக அரசை விமர்சித்து கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவது தொடர்பாக சில சொந்த கருத்துகளை தமிழ்நாடு ஆளுநர் தெரிவித்து இருந்தார் எனக் கூறி ஆளுநரின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் ஐ. பெரியசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "நாகப்பட்டினம் மாவட்டம் வெண்மணி ஊராட்சியில் பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 127 பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு இதுவரை 75 பயனாளிகள் வீடுகளை கட்டி முடித்துள்ளனர். மீதமுள்ள 52 பயனாளிகளால் வீடுகள் கட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு ஒன்றிய அரசால் 31 ஆயிரத்து 51 வீடுகள் மட்டும் வழங்கப்பட்டு 23 ஆயிரத்தி 110 வீடுகள் பயனாளிகளால் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டத்தின் கீழ், ஒரு வீடு கட்டுவதற்கு ஒன்றிய அரசு நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகை ரூபாய் 1.20 லட்சம் ஆகும். இத்திட்டத்தில் ஒன்றிய அரசு தன் பங்காக வீடு கட்ட 72 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்குகிறது.
ஆனால், ஊரகப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் நலன் கருதி தமிழ்நாடு அரசு மாநிலத்தின் நிதி பங்களிப்பாக 1 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் வழங்குகிறது. இதனுடன் மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டம் மூலம் ரூபாய் 26 ஆயிரத்து 460 தூய்மை பாரத இயக்கம் மூலம் ரூபாய் 12 ஆயிரம் உடன் சேர்ந்து தமிழ்நாட்டில் ஒரு வீட்டின் அலகுத் தொகை ரூபாய் 2 லட்சத்து 78 ஆயிரத்து 460 ஆக உள்ளது.
இந்தியாவிலேயே அதிக அளவாக தமிழ்நாட்டில் தான் பயனாளிகளுக்கு பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டத்தின் கீழ் வீடு கட்ட அதிகதொகை வழங்கப்பட்டு வருகிறது. இவ்வரசு பதவியேற்றவுடன் 2,41,861 பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. ஏற்கனவே அனுமதி வழங்கி முடிவுறாமலிருந்த வீடுகளையும் சேர்த்து 2021ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதிக்கு பின்னர் இதுவரை 2 லட்சத்து 93 ஆயிரத்து 277 வீடுகள் முடிக்கப்பட்டுள்ளன.