ஈரோடு: மகளிருக்கான கட்டணம் இல்லா அரசு பேருந்தில் கட்டணம் வசூலித்த நடத்துநர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் இருந்து பவானிசாகர் வழியாக பண்ணாரி நோக்கி பி 1 அரசு பேருந்து புறப்பட்டது. நடத்துநராக தரணிதரன் என்பவர் பணியில் இருந்துள்ளார். அந்த பேருந்து வழக்கம் போல மகளிருக்கு கட்டணம் இல்லா பேருந்தாக இயக்கப்படுகிறது என கருதி ஏராளமான பெண்கள் பேருந்தில் அமர்ந்திருந்தனர்.
இந்த நிலையில் பெண் பயணிகளிடம், இது பன்னாரி சிறப்பு பேருந்து எனக் கூறி நடத்துநர் தரணிதரன் டிக்கெட்டுக்கு கட்டணம் வசூலித்துள்ளார். எனினும் சில பெண்கள் இது வழக்கமாக செல்லும் மகளிர் பயணம் செய்யும் கட்டணம் இல்லாத பேருந்துதான் என்று கூறினர். எனினும் அவர்களிடமும் இது சிறப்பு பேருந்து எனக் கூறி நடத்துநர் கட்டணம் வசூலித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆளுநரின் குடியரசு தின தேநீர் விருந்து...தமிழ்நாடு அரசு புறக்கணிப்பு!
அந்த பேருந்து பண்ணாரி சென்று சேர்ந்த பிறகு பேருந்தில் இருந்து இறங்கிய பெண் பயணிகள் பஸ்சின் முன் பகுதியில் சென்று பார்த்த போது சிறப்பு பேருந்து என ஏதும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. தற்காலிக அறிவிப்பு ஏதும் ஒட்டப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண் பயணிகள், மகளிருக்கு கட்டணம் இல்லா பேருந்து என அரசு அறிவித்திருக்கும் நிலையில் எதற்காக டிக்கெட்டுக்கு பணம் வசூல் செய்து உள்ளீர்கள்? என நடத்துநரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து நடத்துநர் தரணிதரன் பெண்களிடம் வாங்கிய கட்டணத் தொகையை திருப்பிக் கொடுத்துள்ளார். இது தொடர்பாக பயணி எடு்தத வீடியோ ஒன்று இப்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதுகுறித்து சத்தியமங்கலம் அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளரிடம் கேட்டபோது, "பண்ணாரி செல்லும் பி1 அரசு டவுன் பேருந்தில் பெண் பயணிகளிடம் டிக்கெட் பணம் வசூல் செய்ததாக பயணிகள் சிலர் என்னிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து பணியில் இருந்த தற்காலிக நடத்துநர் தரணிதரன் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்,"என தெரிவித்தார்.