சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் கடந்த ஜூலை 5-ம் தேதி ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், பொன்னை பாலு உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களில் ரவுடி திருவேங்டகம், சீஸிங் ராஜா ஆகியோர் சென்னை போலீசார் நடத்திய என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அரசுத் தரப்பில் பி.சீனிவாசன், சி.எஸ்.எஸ்.பிள்ளை என இரு வழக்கறிஞர்கள் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இந்த வழக்கில் 3-வது வழக்கறிஞராக ப.பா.மோகனை நியமிக்க வேண்டும் என ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் முருகானந்தத்தை இன்று நேரில் சந்தித்து அவர் மனு அளித்தனர். அப்போது அவருடன் பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
அப்போது பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச்செயலாளர் பார்த்திபன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சென்னை அமர்வு நீதிமன்றத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணைக்கான அரசுத் தரப்பு வழக்கறிஞராக எங்கள் தரப்பில் பரிந்துரைத்துள்ள ப.பா.மோகனையும் நியமிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் 3 மாதங்களுக்கு முன்பே மனு கொடுத்து இருந்தோம். இந்நிலையில் இரண்டு அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணைக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று தலைமைச் செயலாளர் சந்தித்து மூன்றாவதாக மூத்த வழக்கறிஞர் மோகனை நியமிக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளோம்.
தமிழ்நாட்டை உலுக்கிய முக்கிய வழக்குகளான கோகுல்ராஜ் ஆணவக் கொலை, மேலவளவு படுகொலை, கோவை ஆணவக் கொலை வழக்கு உள்ளிட்டவற்றில் அரசு தரப்பில் ஆஜராகி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்தவர் மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன். எனவே அவரை கூடுதலாக நியமிக்க வலியுறுத்தி உள்ளோம். இரண்டு நாட்களில் உரிய பதிலளிப்பதாக தலைமைச் செயலாளர் கூறியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.