தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் அண்ணா சாலை பக்கம் வரட்டும் - உதயநிதி பதிலடி! - UDHAYANIDHI SLAMS ANNAMALAI

பொதுக்கூட்டத்தில் தன்னை ஒருமையில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை (கோப்புப்படம்)
உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை (கோப்புப்படம்) (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 20, 2025, 5:35 PM IST

சென்னை:சென்னை செனாய் நகரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் திட்டப் பயனாளிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீட்டுமனை பட்டா வழங்கினார். அதன் பிறகு உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பொதுக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலினை ஒருமையில் பேசியதை குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த உதயநிதி, ''அண்ணாமலை ஒருமையில் பேசியதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. பிரச்சனையை திசைமாற்ற, மடைமாற்ற பார்க்கிறார்கள். கேட்கும் நிதியை பெற்றுத்தர துப்பில்லை. சவால் விடுகிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் 'கோ பேக்' மோடி என கூறியதால் அவர் திருட்டுத்தனமாக வந்து சென்றார். கருப்பு கொடி காட்டி பலூன் விட்டதெல்லாம் ஞாபகம் இருக்கும்'' என்றார்.

'அறிவாலயத்தை முற்றுகையிடுவேன்'

அதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினின் வீட்டை முற்றுகையிடுவோம் என அண்ணாமலை கூறியது தொடர்பான கேள்விக்கு, ''நான் வீட்டில் தான் இருப்பேன். இன்று மாலை இளைஞர் அணி நிகழ்ச்சி நடக்கவுள்ளது. ஏற்கனவே அறிவாலயத்தை முற்றுகையிடுவேன் என்று அண்ணாமலை சொன்னார். தைரியம் இருந்தால் அவர் அண்ணா சாலை பக்கம் வர சொல்லுங்கள்'' என கூறினார்.

தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், ''பிரச்சனை உதயநிதிக்கோ, முதலமைச்சருக்கோ கிடையாது. தமிழ்நாட்டின் நிதி உரிமையை கேட்டு வாங்குகிறோம். இதற்கு ஏதாவது செய்ய முடிந்தால் செய்ய சொல்லுங்கள்.'

தனியார் பள்ளிகளை மத்திய அரசின் அனுமதி வாங்கி தான் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தனியார் பள்ளிகளையும், அரசு பள்ளிகளையும் ஒப்பீடு செய்ய வேண்டாம். தனியார் பள்ளிகளில் காலை இலவச உணவு, சீருடைகள் கொடுக்கிறார்களா? தமிழ்நாட்டிலிருந்து வாரணாசிக்கு விளையாட சென்ற மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் கிரிக்கெட் போட்டியில் அரையிறுதியில் தோல்வியுற்றுள்ளனர். இன்று ஊருக்கு திரும்ப ரயில் டிக்கெட் புக் செய்து வைத்திருந்தனர்.

இதையும் படிங்க:விஜய் சிபிஎஸ்இ பள்ளி நடத்துகிறார்..எத்தனை பேருக்கு தெரியும்? - அண்ணாமலை கேள்வி!

உத்தரப்பிரதேசத்தில் கும்பமேளாவில் அங்கு ஆளும் பாஜக அரசும், மத்திய அரசும் கூட்ட மேலாண்மை குறித்து ஒன்றுமே தெரியாமல் மக்களை அலைக்கழித்துள்ளார்கள். எத்தனை இறப்புகள், படுகாய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் இல்லை.

மக்கள் அங்கு ரயில் ஏற முடியாமல் தவித்ததை எல்லாம் பார்த்தோம். இவ்வளவு நடந்த பிறகும் அங்கு இருக்கக்கூடிய மாநில அரசும், மத்திய அரசும் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு ரயில் கிடைக்கவில்லை என்ற தகவல் காலை ஆறு மணிக்கு கிடைத்தது. உடனடியாக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகளுடன் பேசி அவர்களை விமானம் மூலம் தமிழ்நாட்டிற்கு அழைத்து வருவதற்கான உத்தரவை முதலமைச்சர் பிறப்பித்திருக்கிறார்.

உடனடியாக அந்த விளையாட்டு வீரர்களுக்கு உணவு, விமான பயணச்சீட்டு ஆகியவை ஒதுக்கப்பட்டு, இன்று மாலை வாரணாசியிலிருந்து, பெங்களூருவுக்கும் பின்னர் அங்கிருந்து சென்னை வருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்காதது குறித்த அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர், தோழமைக் கட்சிகளுடனும் ஆலோசிக்கவுள்ளார்'' என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details