மதுரை: கரூர் மாவட்டம், குளித்தலை அரியாறு பகுதியில் சட்டவிரோத மணல் குவாரி நடத்தியவர்கள் கண்டறிந்து ஆய்வு செய்து 4.95 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சுடலைகண்ணு என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "கரூர் மாவட்டம், குளித்தலை தாலுகா, வடசேரி கிராமத்தில் அமைந்துள்ள அரியாறு ஆற்றுப்பகுதியில் சட்ட விரோதமாக மணல் எடுக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் சட்ட விரோதமாக தினந்தோறும் பத்திற்கும் மேற்பட்ட ஜேசிபி வாகனங்களைக் கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் மணல் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்தப் பகுதியில் உள்ள ஆற்று படுகையில் 10 மீட்டர் ஆழத்திற்கு இதுபோன்று தோண்டி எடுக்கப்பட்டு திருச்சி நகருக்கு மணல் கடத்தப்பட்டு வருகிறது. இதனால் அரசுக்கு 50 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இதற்க்கு அரசு அதிகாரிகளும், மாவட்ட கனிமவளத்துறை அதிகாரிகளும் துணை போகின்றனர். இந்த அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க மனு அளித்திருந்தேன், அந்த மனு மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையும் படிங்க:போதை பொருள் வழக்கில் நடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது.. காட்டிக்கொடுத்த மருத்துவ பரிசோதனை..!
எனவே, நீதிமன்றம் கரூர் மாவட்டம், குளித்தலை தாலுக்கா, வடசேரி கிராமத்தின் அரியாறு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்த சட்ட விரோத மணல் குவாரிகள் குறித்து விசாரணை நடத்த வழக்கறிஞர் ஆணையம் நியமனம் செய்ய வேண்டும். மேலும், மணல் குவாரி கும்பலுக்கு துணை போன அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்'' என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம். எஸ். ரமேஷ், மரியகிளட் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், '' சட்ட விரோத மணல் குவாரி நடத்திய 14 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விதி மீறி மணல் அள்ளியது குறித்து 4.95 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கரூர் மாவட்டத்தில் விதி மீறி வைகை ஆற்று படுகையில் குவாரி நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க, மாவட்ட ஆட்சியர் தலைமையில், கனிம வளத்துறை இணை இயக்குனர், வருவாய்த்துறை, காவல்துறை உதவியுடன் தொடர் கண்காணிப்பு பணியும் நடைபெற்று வருவதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதனை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கில் இறுதி விசாரணைக்காக வழக்கை ஜனவரி 9ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.