ஸ்ரீவில்லிபுத்தூர்:விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அருப்புக்கோட்டையில் இயங்கும் தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தவர் நிர்மலா தேவி. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி அதே கல்லூரியில் பயிலும் மாணவியரைத் தவறான பாதைக்கு அழைக்கும் வகையில், பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி தமிழகம் முழுவதுமாக பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து, கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, தமிழக அரசு இந்த வழக்கை ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்து அறிவித்தது. அதன்பின், ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி மதுரை காமராசர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன் என்பவரும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி என்பவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை ஸ்ரீ வில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கைது செய்யப்பட்ட மூன்று பேரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு, 3 பேருக்கும் எதிராக 1360 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யப்பட்டது.
இதுமட்டும் அல்லாது, பேராசிரியை நிர்மலா தேவி, உதவிப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரிடமும், வழக்கின் புகார்தாரர்களான கல்லூரி மாணவிகள் அவர்களது பெற்றோர் அருப்புக்கோட்டை கல்லூரியின் நிர்வாகிகள் என சுமார் 120 பேரிடம் நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டது.
இந்த நிலையில், ஸ்ரீ வில்லிபுத்தூர் மகிளா நீதிமன்ற நீதிபதி பகவதி அம்மாள் முன்பு நேற்று (ஏப்.29) விசாரணைக்கு வந்தபோது, பேராசிரியை நிர்மலா தேவியை முதல் குற்றவாளியாக அறிவித்து, உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
மேலும், நிர்மலா தேவி குற்றவாளி என அறிவித்த நீதிபதி அவருக்கான தண்டனை விபரங்கள் இன்று (ஏப்.30) வெளியிடப்படும் என அறிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று (ஏப்.30) ஸ்ரீ வில்லிபுத்தூர் மகிளா நீதிமன்ற நீதிபதி பகவதி அம்மாள் இந்த வழக்கின் குற்றவாளியான நிர்மலா தேவியின் தண்டனை விபரங்களை அறிவித்தார்.
அதன்படி, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு, IPC 370-1 ன் கீழ் 7 ஆண்டுகள் சிறை ரூ.5 ஆயிரம் அபராதம், IPC 370-3 ன் கீழ் 10 ஆண்டுகள் சிறை ரூ.25 ஆயிரம் அபராதம், Immaral Trafic act 5(1)a ன் கீழ் 5 ஆண்டுகள் சிறை ரூ.2 ஆயிரம் அபராதம், imaral Trafic act 9 கீழ் 10 ஆண்டுகள் சிறை ரூ.10ஆயிரம் அபராதம் மற்றும் 67 ITP ன் 3 ஆண்டுகள் சிறை ரூ.2 லட்சம் அபராதம் என 5 பிரிவுகளின் கீழ் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஏக காலம் சிறை தண்டனை அறிவிப்பு என்பதால் மொத்தமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்கவும் 1 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் அபராதமும் செலுத்தவும் உத்தரவிட்டு, அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஓர் ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை வழங்க தீர்ப்பளித்தார். இதனைத் தவிர்த்து, வழக்கு நடைபெற்ற காலத்தில் சிறையில் இருந்த 11 மாதத்தைத் தண்டனை காலத்தில் இருந்து குறைத்துக் கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:நிர்மலா தேவி வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இருவர் மீதும் மேல்முறையீடு செய்யப்படும் - சிபிசிஐடி தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் பேட்டி