திருவண்ணாமலை:பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை நகரில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் மகா சிவராத்திரி விழா நேற்று (மார்ச் 8) இரவு சிறப்பாக கொண்டாடப்பட்டது. மகா சிவராத்திரியை முன்னிட்டு உண்ணாமுலை உடனாகிய அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து அண்ணாமலையார் சன்னதி பின்புறம் அமைந்துள்ள லிங்கோத்பவருக்கு பால், பழம், தேன், தயிர், சந்தனம், விபூதி, சிவப்பு, மஞ்சள் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க அபிஷேகங்கள் செய்து பூ மாலை அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது. இரவு 11 மணி முதல் 12 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனை வழிப்பட்டனர்.
மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையார் கோயிலில் கிரிவலம் வந்தும், இரவு முழுவதும் கண் விழித்து காத்திருந்து அண்ணாமலையாரை வழிப்பட்டனர்.
இந்த நிலையில், மாசி மாத பிரதோஷ தினமான இன்று அண்ணாமலையார் கோயிலில் உள்ள பெரிய நந்திக்கு அரிசி மாவு, மஞ்சள் தூள், அபிஷேகத்தூள், பஞ்சாமிர்தம், தயிர், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி மற்றும் ஆயிரம் லிட்டர் பால் ஆகியவற்றைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதையும் படிங்க:கண்ணைக் கவரும் தஞ்சை கண்ணாடி கலைப்பொருள்கள்.. அசத்தும் பெண் தொழில் முனைவோர்!