அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கீழப்பழுர் பகுதிக்கு உட்பட்ட ஆச்சி நகர்ப் பகுதியில் வசிக்கும் ரவிக்குமார் என்பவர் இணைய வர்த்தகத்தின் (Online Trading) மூலம் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்ற விளம்பரம் ஒன்றிலிருந்த 7305161526 என்ற எண்ணை வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொண்டுள்ளார்.
இதன் பின்பு ஒரு வாட்ஸ்அப் குழுவில் இணைந்து அவர்கள் கொடுத்த அறிவுரைகளின் அடிப்படையில், மூடிசெக் (moodysec) என்ற செயலியில் இனைந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, வெவ்வேறு வாட்ஸ்அப் எண்களிலிருந்து வந்த அறிவுரைகளின்படி மொத்தம் ரூ.16 லட்சம் பணத்தை முதலீடு செய்து இழந்துள்ளார்.
இதனை அடுத்து, இணையக் குற்றப் புகாருக்கான www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் ரவிக்குமார், இந்த மோசடி குறித்து புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், கடந்த பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி அரியலூர் இணையக் குற்றக் காவல் நிலைய மனு எண் 42/2024ன்படி பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இணையக் குற்றப் பிரிவின் கூடுதல் காவல் தலைமை இயக்குநர் சஞ்சய் குமாரின் உத்தரவிட்டதன் அடிப்படையில், திருச்சி மண்டல காவல் துறைத் தலைவர் கார்த்திகேயன் மற்றும் திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் மனோகர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ், இணையக் குற்றப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் தலைமையில் ஒரு குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.