நீலகிரி:நீலகிரி மாவட்டம் உதகை வட்டத்திற்குட்பட்ட லவ்டேல் காந்தி நகர் பகுதியில் பிரிட்ஜூ என்பவருக்குச் சொந்தமான இடத்தில் வீட்டின் மேல்பகுதியில் உள்ள பழைய கழிப்பிட கட்டிடம் இடிந்து விழுந்து உள்ளது. இதில் வீட்டில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 13 நபர்கள் உள்ளே சிக்கி இருப்பதாகக் கூறப்பட்டது.
இந்த விபத்தில் உள்ளே சிக்கியவர்களில் 10 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். மீட்கப்பட்ட நபர்களில் முத்துலட்சுமி (36), சங்கீதா (30), பாக்கியம் (36), உமா (35), சகிலா (30), ராதா (38) என ஆறு பெண்கள் உயிரிழந்து உள்ளனர். மேலும், மகேஷ் (23), சாந்தி (45), ஜெயந்தி (56), தாமஸ் (24) என நான்கு பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
கட்டுமானப் பணியின்போது மண் சரிந்து திடீரென கழிவறை கட்டிடம் சரிந்து விழுந்த நிலையில், உள்ளே சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணி பொக்லைன் இயந்திரம் உதவியுடன் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 10 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், மற்றவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
மாவட்ட நிர்வாகம், தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில், விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் மற்றும் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதலைத் தெரிவித்து, நிவாரணம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், “நீலகிரி மாவட்டம், உதகை வட்டம், உதகை நகரம் கிழக்கு கிராமம், லவ்டேல் காந்தி நகர் பகுதியில் இன்று நண்பகல் தனியாருக்குச் சொந்தமான சுவர் ஒன்றை இடிக்கும் பணியில் 17 கட்டுமானத் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மண் சரிந்து 10 நபர்கள் சிக்கிய விபத்தில் ராதா (38), பாக்கியம் (36), முத்துலட்சமி (36), உமா (35), சங்கீதா (30) மற்றும் சகிலா (30) ஆகிய ஆறு பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் காயமடைந்து உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஜெயந்தி (56), சாந்தி (45), தாமஸ் (24) மற்றும் மகேஷ் (23) ஆகிய நான்கு நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இதையும் படிங்க:அமெரிக்காவில் இந்திய மாணவர் சடலமாக மீட்பு! தொடரும் இந்தியர்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள்!