சென்னை:தமிழக அரசு சார்பில் 78வது சுதந்திர தின விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு தகைசால் விருது மற்றும் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவிடித்தார்.
யார் இந்த முனைவர் குமரி அனந்தன்?:கன்னியாகுமரி மாவட்டம் குமரிமங்கலம் என்ற அகத்தீஸ்வரத்தில் சுதந்திரப் போராட்டத் தியாகி அரிகிருச்சுணன் - தங்கம்மாள் தம்பதியருக்கு முதல் மகனாக 1933ஆம் ஆண்டு, மார்ச் 19 ஆம் தேதியன்று பிறந்தார். காமராசரின் சீடராக விளங்கியவர், காங்கிரஸ் பேரியக்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவராகவும், காந்தி ஃபோரம் அமைப்பின் தலைவராகவும் பொறுப்பேற்றவர்.
விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டம்: மக்கள் நலனுக்காகப் பதினேழு முறை தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டவர். ஏழை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வேண்டுமென்று களக்காட்டிலிருந்து இராதாபுரம் வரை நடைபயணம் மேற்கொண்டதன் விளைவாக 1984ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று 1.5 ஏக்கர் நஞ்சை நிலம் மற்றும் 2.5 ஏக்கர் புஞ்சை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத் திட்டத்தைப் பெற்றுத் தந்தவர்.
நாடாளுமன்றத்தில் தமிழ்:இவர் 1977-ஆம் ஆண்டு நாகர்கோவில் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நாளிலிருந்து தமிழில் பேசுவதற்குப் பல முறை அவையில் போராடி பத்து முறைக்கு மேல் தொடர்ந்து காவலர்களால் வெளியேற்றப்பட்டுள்ளார். அவரின் தொடர் முயற்சியால் 1978ஆம் ஆண்டு நவம்பர் 20 அன்று தமிழில் பேசுவதற்கு அனுமதி கிடைத்து, தொடர்ந்து தமிழிலேயே பேசியவர்.