சென்னை:சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று (மார்ச் 27) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாட்டில் 2024ஆம் ஆண்டு ஜனவரி 22 வரை, 6.18 கோடி வாக்களர்கள் இருந்த நிலையில், தற்போது 6 கோடியே 23 லட்சத்து 26 ஆயிரத்து 901 வாக்காளர்கள் உள்ளனர். அதில் 3 கோடியே 6 லட்சத்து 2 ஆயிரத்து 367 ஆண் வாக்காளர்களும், 3 கோடியே 17 லட்சத்து 16 ஆயிரத்து 69 பெண் வாக்காளர்களும், 8 ஆயிரத்து 465 மூன்றாம் பாலினத்தவர்களும் உள்ளனர்.
18 வயது பூர்த்தியான முதல் முறை வாக்காளர்களாக 10 லட்சத்து 90 ஆயிரத்து 574 பேரும், மாற்றுத்திறனாளி வாக்காளர்களாக 4 லட்சத்து 61 ஆயிரத்து 730 நபர்களும், 85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் 6 லட்சத்து 13 ஆயிரத்து 991 பேரும் உள்ளனர். இந்த தேர்தலில் 85 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிக்கும் வகையில் படிவம் 12 டி அறிமுகப்படுத்தப்பட்டு, தபால் மூலம் வாக்குகளைச் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக 4 லட்சத்து 30 ஆயிரத்து 734 மூத்த குடிமக்களுக்கு படிவங்கள் வழங்கப்பட்டதில், 77 ஆயிரத்து 455 படிவங்கள் மட்டுமே திரும்ப வந்துள்ளது. தமிழ்நாட்டில் 7 லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர், அவர்களுக்கு முதல்கட்ட பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில், 39 பொது பார்வையாளர்கள், 20 காவல் பார்வையாளர்கள், 59 செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
190 கம்பெனி துணை ராணுவப் படையினர் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே 25 கம்பெனி துணை ராணுவம் தமிழ்நாடு வந்துள்ளனர். மீதம் உள்ள கம்பெனி துணை ராணுவத்தினர் ஏப்ரல் 1 முதல் தமிழ்நாட்டிற்கு வர உள்ளனர்.