சென்னை:நாடு முழுவதும் நாளை (ஜன.26) 75-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. சென்னை மெரினாவில் உழைப்பாளர் சிலை அருகே நடைபெறும் விழாவில் ஆளுநர் ஆர்.என் ரவி தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். இதில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள், சிறப்பு விருந்தினர்கள் ஆகியோர் பங்கேற்பதால், இன்றும், நாளையும் (ஜனவரி 25, 26) ட்ரோன்கள், ரிமோட் மூலம் இயக்கப்படும் மைக்ரோ-லைட் ஏர்கிராஃப்ட், பாரா கிளைடர்ஸ், பாரா மோட்டார்ஸ், ஹேண்ட் கிளைடர்ஸ், ஹாட் ஏர் பலூன்கள் போன்றவை பறக்கவிட தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் இந்த தடை உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் எச்சரித்து உள்ளார். சென்னை விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள் மற்றும் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும், சென்னையில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் ஹோட்டல்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கும் படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது என பெருநகர சென்னை காவல் துறை சார்பில் தெரிவிக்கபட்டு உள்ளது.