ஈரோடு: ஈரோட்டில், சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 10 பாடப்பிரிவுகளில் இளங்கலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பில் சுமார் 1,500 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அங்கு கௌரவப் பேராசிரியராக பணியாற்றி வரும் பேராசிரியர் பிரேம்குமார் என்பவர் மாணவ, மாணவிகளைத் தரக்குறைவாக நடத்துவதாகவும், தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும் கல்லூரி முதல்வரிடம் மாணவர்கள் புகாரளித்துள்ளனர். மேலும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வகுப்புகளைப் புறக்கணித்து வந்துள்ளனர்.
அதையடுத்து, மாணவர்களை அழைத்து கல்லூரி முதல்வர் ராதாகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கௌரவப் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து, கல்லூரி பேராசிரியர்கள் அடங்கிய கமிட்டியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, புகாருக்குள்ளான கல்லூரி பேராசிரியர் பிரேம்குமாரை இடைநீக்கம் செய்ய முதல்வர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார். மேலும், பேராசிரியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுங்கராயிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: நடிகைகளின் பாலியல் பிரச்னைகளுக்கு யார் பொறுப்பு? - பிரபல நடிகை கைக்காட்டுவது இவர்களைதான்!