சென்னை: சென்னை அண்ணா நகரில் கோ ஃபார் கோல்ட் (GO FOR GOLD) என்ற தலைப்பில் தனியார் அமைப்பானது, பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்று இந்தியாவின் தேசியக் கொடியை ஏந்திச் செல்ல உள்ள மூத்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு இந்திய தேசிய கொடியுடன் சரத் கமலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சரத் கமல், "என்னுடைய ஐந்தாவது ஒலிம்பிக் தொடரை விளையாட உள்ளேன். டேபிள் டென்னிஸ் போட்டியில் குழுவாக விளையாடுவதில் முதன்முறையாக நமது அணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை கலப்பு மற்றும் தனி நபர் பிரிவில் விளையாடி இருக்கிறோம். இந்த முறை வெற்றிபெற நல்ல வாய்ப்பு இருக்கிறது.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தொடக்க விழாவில் இந்தியாவின் தேசிய கொடியை ஏந்திச் செல்வது எனக்கு மட்டுமில்லாமல், உலக டேபிள் டென்னிஸ் வீரர்களுக்கு பெருமை மிகுந்த தருணமாக இருக்கும். ஜூலை 26 ஆம் தேதி தேசியக் கொடியை கையில் பிடித்து நடக்கும் நாளுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.
ஒலிம்பிக் போட்டிக்கான பயிற்சியை சரியாக செய்திருக்கிறேன். கடந்த நான்கு மாதங்களாக ஒலிம்பிக் போட்டிக்கு விளையாட பயிற்சி எடுத்து வருகிறேன். இப்போது போட்டியில் பங்கேற்கும் கடைசி கட்டத்தில் வந்திருக்கிறேன்.