சென்னை:காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த செப்டம்பர் 9ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும், இல்லை என்றால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என சாம்சங் நிறுவனம் தெரிவித்தது. இருப்பினும் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் இணைந்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன் ஆகியோர் தலையிட்டு சாம்சங் தொழிலாளர்கள் விவகாரத்தில் விரைவில் தீர்வு காணுமாறு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.
அதன்பேரில் சென்னை தலைமைச் செயலகத்தில் சாம்சங் தொழிலாளர்கள் கோரிக்கை தொடர்பாக சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, சி.வி.கணேசன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
நாளை முடிவு தெரியும் :தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், "சாம்சங் ஊழியர்கள் கோரிக்கை தொடர்பான விவகாரத்தில் உடன்பாடு எட்டப்படவில்லை. நாளை முடிவு தெரியும்" என்றார்.
சிஐடியு மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் கூறுகையில், "பேச்சுவார்த்தையின்போது எங்களது கருத்துகளை முழுமையாகக் கூறியுள்ளோம். தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் என்ன நடந்தது? கடந்த 16 ஆண்டுகளாகச் சங்கம் வைக்காத தொழிலாளர்கள் ஏன் சங்கம் வைத்தோம்? எப்படி சங்கம் அமைக்கக் கட்டாயப்படுத்தப்பட்டோம்? என்று குறைகளை அமைச்சர்களிடம் தெளிவாகச் சொன்னார்கள்.
இதையும் படிங்க:ஊட்டி இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்க.. நீலகிரி எம்பியிடம் வியாபாரிகள் சங்கங்கள் கோரிக்கை!
இதனை அமைச்சர்களும் நிதானமாகக் கேட்டறிந்தனர். இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வுகாண வேண்டும் என கேட்டார்கள். நிச்சயம் கொண்டு வராலாம். அதுதான் எங்களுக்கும் விருப்பம். ஆனால் சட்டப்படி சங்கம் அமைக்க வேண்டும் என்ற பிரச்சனை, சட்டத்தில் இருப்பதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை.
சிஐடியு மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பு (Credits- ETV Bharat Tamil Nadu) இது குறித்து நிர்வாகத்துடன் பேசி பதிலைச் சொல்லுங்கள். அதன் பிறகு மற்றவற்றைப் பார்க்கலாம் எனக் கூறியுள்ளோம். நிர்வாகத்திடம் பேசுவதாக அமைச்சர்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. நிர்வாகத்திடம் பேசிய பிறகு அவர்களின் கருத்தையும் கேட்டு எங்களிடம் பேசுவதாகச் சொல்லி இருக்கிறார்கள். இதுதான் இன்றைக்கு நடந்தது. எனவே இந்த பேச்சுவார்த்தையின் மூலம் எந்த முடிவும் எட்டப்படவில்லை" என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்