சேலம்:சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழக அரசுக்கு ஆதரவாக குரல் கொடுத்த 73 தொகுப்பூதியப் பணியாளர்கள் மீது விசாரணை நடத்த பல்கலை நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட குழு நடவடிக்கை எடுக்க கூடாது எனவும், இதுகுறித்து துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி பல்கலைக்கழக தொழிற்சங்கம் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சேலம் பெரியார் பல்கலைக்கழக தொழிற்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் பெரியார் பல்கலைக் கழக முன்னாள் பதிவாளர் தங்கவேல் மீது சுமத்தப்பட்ட ஊழல் முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்திய தமிழக உயர் கல்வித் துறை கூடுதல் செயலாளர் பழனிச்சாமி தலைமையிலான குழு விசாரணையின் முடிவில் அவரை குற்றவாளி என அறிவித்தது.
ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபணமான கு.தங்கவேலை இரண்டு முறை பணியிடை நீக்கம் செய்ய துணைவேந்தருக்கு அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை மதிக்காமல் துணைவேந்தர் அவரை பணி ஓய்வு பெறச் செய்தார். இது சட்டவிரோதமானது மற்றும் தமிழக அரசுக்கு எதிரானது. இதில் தமிழக அரசுக்கு ஆதரவாக குரல் கொடுத்த 73 தொகுப்பூதியப் பணியாளர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் மீது சட்டவிரோதமாக விசாரணைக்கு துணைவேந்தர் உத்தரவிட்டுள்ளார்.