சென்னை: கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் நடந்த போலி என்.சி.சி. முகாமில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி வழக்கறிஞர் ஏ.பி.சூரிய பிரகாசம் என்பவர் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட பன்னோக்கு சிறப்பு குழுவின் தலைமை ஐஏஎஸ் அதிகாரி ஜெயஸ்ரீ முரளிதரன் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில், சிறப்பு குழு சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று பாதிக்கப்பட்ட மாணவிகள், அவர்களது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்கியதாகவும், பாதிப்பிலிருந்து விரைந்து மீண்டுவர அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சிறப்பு குழுக்கள் போலி என்சிசி முகாம் நடத்தப்பட்டதாக கூறப்படும் மற்ற பள்ளிகளுக்கும் சென்று, உளவியல் ஆலோசனைகளை வழங்கியதாகவும், போக்சோ புகார்களை எப்படி வழங்குவது, ஆசிரியர்கள் எப்படி கையாள்வது உள்ளிட்ட ஆலோசனைகளையும் விழிப்புணர்வையும் வழங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சம்பந்தபட்ட மாணவிகளிடம் மன அழுத்தம் உள்ளதா என கண்டறியப்பட்டு உள்ளதாகவும், மனதளவில் பாதிக்கப்பட்ட மாணவிகளின் எதிர்கால பாதுகாப்பு குறித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், பெற்றோர்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.