மதுரை: திண்டுக்கல் மின் பகிர்மான அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2021ஆம் ஆண்டு தொடங்கி 2024 டிசம்பர் 17ஆம் தேதி வரை ஏறக்குறைய ஒரு லட்சம் மீட்டர் பெட்டிகள் பழுதாகியுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீடுகளில் பொருத்துவதற்காக ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் செய்ய சர்வதேச அளவில் விடப்பட்ட ஒப்பந்தப்புள்ளியில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக, அறப்போர் இயக்கம் தொடர்ந்து குற்றச்சாட்டினை முன் வைத்து வந்தது. இந்நிலையில் அதானியின் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை மின்சார வாரியம் தற்போது அதிரடியாக ரத்து செய்துள்ளது.
இந்நிலையில் மதுரையிலுள்ள இந்தியன் குரல் உதவி மையம் என்ற அமைப்பின் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், ஆர்டிஐ ஆர்வலருமான என்.ஜி.மோகன், திண்டுக்கல்லில் உள்ள தமிழ்நாடு மின் வாரியத்தின் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்திற்கு அனுப்பிய ஆர்டிஐ கடிதத்தில், "தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள மின் பகிர்மான அலுவலகங்களில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை பழுதடைந்துள்ள ஒரு முனை (சிங்கிள் ஃபேஸ்) மற்றும் மும்முனை (த்ரீ ஃபேஸ்) மின் அளவீட்டுப் பெட்டி (மீட்டர்) விபரம் தருமாறு கோரியிருந்தார்.
அதன் அடிப்படையில், திண்டுக்கல் மீனாட்சி நாயக்கன்பட்டி மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் அலுவலகத்திலிருந்து, திண்டுக்கல் மின் பகிர்மான வட்டத்தில் உள்ள மின் பகிர்மான அலுவலகங்களில் கடந்த 01.01.2021 முதல் 17.012.2024 வரை ஒரு முனை மின் இணைப்புகளில் 81 ஆயிரத்து 874 மின் அளவிகளும், மும்முனை மின் இணைப்புகளில் 16 ஆயிரத்து 766 மின் அளவிகள் பழுது காரணமாக நீக்கப்பட்டு புதிய மின் அளவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
மேற்கண்டவை தவிர மும்முனை மின் இணைப்பில் உள்ள ஒரு மின் அளவி குறைதீர் மன்ற வழக்கு காரணமாக நீக்கப்படாமல் உள்ளது என்றும், தற்போது ஒருமுனை மின் இணைப்புகளில் 4 ஆயிரத்து 487 மின் அளவிகள் மற்றும் மும்முனை மின் இணைப்புகளில் 272 மின் அளவிகள் பழுது காரணமாக மாற்றப்பட உள்ளது" என்றும் பதில் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: மதுரையில் மட்டும் இவ்வளவு காலிப்பணியிடமா? - ஆர்டிஐ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
இதுகுறித்து ஆர்டிஐ ஆர்வலர் என்.ஜி.மோகன் கூறுகையில், "மின் வாரிய அலுவலகத்தின் வாயிலாக வீடுகளில் பொருத்தப்படும் மீட்டர் பெட்டிகள் பழுதடைவது குறித்த தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், திண்டுக்கல் மின் வட்டத்தில் மட்டும் உள்ள தகவல்தான் ஆர்டிஐ மூலம் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் எத்தனை மீட்டர் பெட்டிகள் என்பதை கணக்கிலெடுத்தால் பல அதிர்ச்சிகள் இருக்கும் என நம்புகிறேன்.
ஆகையால் இந்த விசயத்தில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு மின் நுகர்வோர்களுக்கு தரமான மின் அளவீட்டு பெட்டிகளை வாங்கித் தர நடவடிக்கை எடுக்கவும், உரிய நியாயத்தைத் தரவும் வேண்டுகோள் விடுக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.