சென்னை: செல்வராகவன் இயக்கத்தில் ’7ஜி ரெயின்போ காலனி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. பிரபல இயக்குநர் செல்வராகவன் ’துள்ளுவதொ இளமை’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். அந்த படத்தில் தனது தம்பி தனுஷை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். தனுஷின் முதல் படமே இளைஞர்கள் மத்தியில் கவனம் பெற்றது.
இதனைத்தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் ‘7ஜி ரெயின்போ காலனி’ கடந்த 2004இல் வெளியான இத்திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 7ஜி ரெயின்போ காலனி திரைப்படம் இன்று வரை ரசிகர்கள் மனதில் கிளாசிக் காதல் திரைப்படமாக இடம்பெற்றுள்ளது. இப்படத்தில் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் ஆகியோரது நடிப்பு பெரிய அளவில் பாராட்டைப் பெற்றது.
யுவன் ஷங்கர் ராஜாவின் மனதை வருடும் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது. இன்று வரை ’7ஜி ரெயின்போ காலனி’ படத்தின் காட்சிகள் ரீல்ஸ்களில் வலம் வருகிறது. இந்நிலையில் ரசிகர்களால் பெரிய அளவில் பாராட்டப்பட்ட 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இன்று புத்தாண்டை முன்னிட்டு 7ஜி ரெயின்போ காலனி 2 ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் செல்வராகவன் வெளியிட்டுள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். இயக்குநர் செல்வராகவனிடம் ரசிகர்கள் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்திற்கு அப்டேட் கேட்டு வந்த நிலையில், 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் அப்டேட் சர்ப்ரைஸாக அமைந்துள்ளது. 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முன்னதாக செல்வராகவன், ஜிவி பிரகாஷ் கூட்டணியில் உருவாகும் 'Mental மனதில்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.
இதையும் படிங்க: "நல்லவங்களை ஆண்டவன் கை விட மாட்டான்"... பாட்ஷா ஸ்டைலில் புத்தாண்டு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்! - RAJINIKANTH NEW YEAR WISHES
'Mental மனதில்' படத்தின் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டார். மனித உறவுகளின் முக்கியத்துவத்தை தனது அழுத்தமான கதையின் மூலம் வெளிப்படுத்தும் செல்வராகவன் கடைசியாக இயக்கிய ஒரு சில படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் ’7ஜி ரெயின்போ காலனி 2’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.