மதுரை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்திற்காக மதுரையில் போராடிய நடிகை குஷ்பூ உள்ளிட்ட பாஜக மகளிர் அணி தொண்டர்களை போலீசார் கைது செய்து ஆட்டு மந்தைக்குள் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதன் மூலம் தங்களை போலீசார் அவமானப்படுத்துவதாக பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் என்ற குற்றவாளிய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தடையை மீறி போராட்டம்:
மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, பாஜக சார்பில் இன்று (ஜனவரி 03) வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், இன்று தடையை மீறி மதுரை சிம்மக்கல் பகுதியில் கண்ணகி சிலை அமைந்துள்ள செல்லத்தம்மன் கோயிலின் முன்பாக பாஜக மகளிர் அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காவல்துறையின் மறுப்பை மீறி பேரணியாக புறப்படும் முயன்ற, பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு, பாஜக எம்எல்ஏ சரஸ்வதி, பாஜக மாநில மகளிரணி தலைவர் உமா ரவி உட்பட பாஜக மகளிரணியினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: விக்கிரவாண்டியில் எல்கேஜி சிறுமி உயிரிழப்பு.. வெளியானது சிசிடிவி காட்சி!
ஆட்டுமந்தையுடன் அடைப்பு:
தொடர்ந்து, கைது செய்த அனைவரையும் பாஜகவினர் சிம்மக்கல் பகுதியில் மைய நூலகம் அருகே அமைந்துள்ள, ஆயிரம் வீட்டு யாதவ ஆடு வியாபாரிகள் ஆட்டு மகமை கட்டளை திருமண மண்டபத்தின் உள்ளே ஆடுகள் அடைக்கப்பட்ட பகுதியின் அருகே அடைத்துள்ளனர். மண்டபத்துக்கு பாஜகவினர் அழைத்து வரப்பட்ட பிறகும் வெளியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் அந்த வளாகத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் அங்கு ஆடுகளின் சத்தமும், ஆடுகளின் கழிவுகள் காரணமாக துர்நாற்றமும் வீசியுள்ளது.
இதனால், பாஜக மகளிரணி நிர்வாகிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், தங்களை வேறு இடத்திற்கு மாற்ற கோரி மண்டபத்துக்குள் இருந்து பாஜகவினர் கோரிக்கை வைத்து கோஷம் எழுப்பியுள்ளனர். மேலும், ஆடுகள் அடைக்கப்படும் மந்தைக்கு அருகே உள்ள மண்டபத்தில் தங்களை அடைத்து போலீசார் அவமானப்படுத்துவதாக பாஜகவினர் குற்றம்சாட்டினர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.