நீலகிரி: கோவையில் தாய் யானை உயிரிழந்த நிலையில், அதன் ஒரு மாத குட்டி யானையை யானைக்கூட்டத்துடன் இணைக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்ட வந்தனர். ஏழு நாட்களாக பல்வேறு யானை கூட்டங்களுடன் குட்டி யானையை சேர்க்க எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், தற்போது குட்டி யானை முதுமலை யானைகள் முகாமிற்கு கொண்டுவரப்பட்டது.
கோயம்புத்தூர் தடாகம் அடுத்த வரப்பாளையம் பன்னிமடை காப்புக்காடு பகுதியில் பெண் யானை, கடந்த டிசம்பர் 24 அமர்ந்த நிலையில் உயிரிழந்தது. இது குறுத்து தகவலறிந்து வந்த வனத்துறையினர், உயிரிழந்த யானையை மீட்டு பிரேத பரிசோதனை செய்து காட்டுப்பகுதிக்குள் அடக்கம் செய்துள்ளனர். யானையின் உள் உறுப்புகளில் பிரச்னை ஏற்பட்டு யானை கீழே விழுந்து எழ இயலாமல் உயிரிழந்ததாக வனத்துறை அலுவலர்கள் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து, உயிரிழந்த பெண் யானையின் ஒரு மாத குட்டி யானையை பல்வேறு யானைக் கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். கடந்த ஏழு நாட்களாக பல்வேறு யானைக் கூட்டத்துடன் குட்டி யானையை சேர்க்க எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது. இதனால், குட்டி யானையை நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமிற்கு கொண்டு செல்ல வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: பெண் யானை உயிரிழப்புக்கு காரணம் என்ன? குட்டியை கூட்டத்துடன் இணைக்க வனத்துறை முயற்சி!
அதன்படி, முதன்மை வன உயிரின காப்பாளர் உத்தரவின்படி, வன பாதுகாவலர் மற்றும் ஆனமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ் மற்றும் மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் அறிவுரையின்படி, வனச்சரக அலுவலர் மற்றும் வன கால்நடை அலுவலர் தலைமையில், குட்டி யானையை நேற்று (டிசம்பர் 31) செவ்வாய்க்கிழமை, கோவையில் இருந்து தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
சுமார் 8 மணி நேர பயணத்திற்கு பிறகு பெண் குட்டி யானை பாதுகாப்பாக முதுமலை யானைகள் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு, குட்டி யானைக்கு பூஜைகள் செய்யப்பட்டு, எடை பார்க்கப்பட்டு மரக்கூண்டில் இருந்து விடுவிக்கப்பட்டது. இந்த குட்டி யானையின் வருகையால் தெப்பக்காடு யானைகள் முகாமில் தற்போதுள்ள யானைகளின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது என அலுவலர்கள் தெரிவித்தனர்.
மேலும், யானைக்கு தேவையான பால், புரதச்சத்து நிறைந்த உணவுகள் வழங்கி, கால்நடை மருத்துவர்கள் தலைமையிலான வனத்துறை அலுவலர்கள் அதனை கவனித்து வருகின்றனர். மேலும், குட்டி யானையை பராமரிக்க நியமிக்கப்பட்டுள்ள பாகன்கள் கண்காணித்து வருவதாகவும் வனத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.