திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் வளாகத்தில் ஜனவரி 28ஆம் தேதி முதல் பிப்ரவரி 3ஆம் தேதி வரை "பாரத சாரண, சாரணியர் இயக்க வைர விழா" மற்றும் "கலைஞர் நூற்றாண்டு பெருந்திரளணி" நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிறைவு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவரை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சாரண, சாரணியர், அதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதைத் தொடர்ந்து மேடைக்கு வந்த முதலமைச்சர் சாரண, சாரணியருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். தொடர்ந்து வைர விழா மலரை வெளியிட்டார்.
நிறைவாக மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இது மணப்பாறையா? இல்லை சாரண, சாரணியர் இயக்கத்தின் பாசறையா? என வியக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடுகளைச் செய்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு பாராட்டுகள். மகேஸை நான் குழந்தையிலிருந்து பார்த்து வருகிறேன். அவர் தற்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று, கல்வித்துறைக்கு பல்வேறு அற்புதமான திட்டங்களைச் செய்து வருகிறார்.
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் செயல்படுத்தப்பட்ட "இல்லம் தேடி கல்வி" பொருளாதார ஆய்வறிக்கையிலும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. அவரின் சாதனைகளைப் பார்க்க அவரின் தந்தை அன்பில் பொய்யாமொழி இல்லை என்கிற வருத்தம் இருந்தாலும், பொய்யாமொழி இடத்திலிருந்து நான் அதைப் பார்த்து வருகிறேன்.
சாரண, சாரணியர் இயக்கத்தில் இந்தியா முழுவதும் 80 லட்சம் மாணவர்கள் உள்ளார்கள். தமிழ்நாட்டில் மட்டும் 12 லட்சம் பேர் உள்ளார்கள். ஏதுவாக இருந்தாலும் தமிழ்நாட்டின் பங்கு இருக்கும் என்பதைச் சாரண, சாரணியர் இயக்கத்திலும் பார்க்க முடிகிறது. நம் நாட்டுப் பற்று என்பது நாட்டின் மீதான பற்று எனச் சொல்வதை விட அது, மக்கள் மீதான பற்று எனக் கூறலாம். மக்கள் மீதான பற்று தான் உண்மையான நாட்டுப் பற்று.
சாரண, சாரணியர் பொன் விழா கொண்டாடும் போது கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தார். வைர விழா இன்று கொண்டாடும் போது நான் முதலமைச்சராக இருக்கிறேன். நம் நாட்டில் சகோதத்துரத்துவ உணர்வோடும், ஒற்றுமை உணர்வோடும் வாழ்ந்து வருகிறோம். பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் இங்கு ஒன்று திரண்டு ஒருங்கிணைந்து ஒரே குடும்பமாக இருப்பது தான் நம் அன்பின் வலிமை.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறை சிப்காட் வளாகத்தில் நடைபெற்ற பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் வைர விழா பெருந்திரளணி மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி நிறைவு விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழா… pic.twitter.com/cNGrASziN1
— CMOTamilNadu (@CMOTamilnadu) February 2, 2025
இதையும் படிங்க: திமுக கூட்டணியில் திருமாவளவன் இருப்பாரா? சந்தேகம் கிளப்பும் தமிழிசை சௌந்தரராஜன்!
திராவிட மாடல் அரசால் இந்த விழாவிற்கு 33 துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வைச் சிறப்பாக நடத்திய அனைவருக்கும் நன்றி. "நிதி ஆயோக்" அறிக்கையில் 17 இலக்குகளிலும் தமிழ்நாடு தான் முன்னிலையில் உள்ளது. தமிழ்நாடு சாரண இயக்க அலுவலகம் நவீன வசதிகளுடன் ரூ.10 கோடி செலவில் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நாம் ஒற்றுமை உணர்வை எப்பொழுதும் விட்டு விடக்கூடாது. மனிதர்கள் அனைவரும் ஒன்று என்கிற உணர்வு அனைவரிடமும் இருக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எஸ்.எஸ்.சிவசங்கர், மெய்யநாதன், கோவி.செழியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் & சாரண சாரணியர் இயக்க தலைவருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சாரண, சாரணியர் இயக்க அதிகாரிகள் என 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.