வாழ்க்கையில் ஒரு முறையாவது காதில் எறும்பு அல்லது மற்ற பூச்சி புகுந்த அவதியை நாம் அனைவரும் அனுபவித்திருப்போம். காதுக்குள் செல்லும் பூச்சிகள் குடைச்சல் கொடுத்து நம்மை இயல்பாக இருக்க வைக்காது. குறிப்பாக, தூங்கும்போது இப்படி சின்ன சின்ன பூச்சி காதுக்குள் புகுந்து தூக்கத்தை கெடுத்து தொந்தரவு செய்யும். அப்படி, உங்கள் காதிலும் இந்த பூச்சிகள் புகுந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியுமா? இதோ இப்படிச் செய்யலாம்.
- மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரில் சிறிதளவு உப்பு கலக்கவும். பின்னர், இதிலிருந்து இரண்டு அல்லது மூன்று சொட்டு காதில் ஊற்றலாம். உப்பு கலந்த நீர் பூச்சிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்துவதால், அது உடனே காதிலிருந்து வெளியே வந்துவிடும்.
- காதுக்குள் எறும்பு அல்லது பூச்சி புகுந்துவிட்டால், முதலில் ஒரு இருட்டறைக்குள் சென்று டார்ச் அல்லது லைட்டை காதில் காட்ட வேண்டும். ஒளி பூச்சிகளை கவரும் என்பதால் அவை உடனே வெளியே வந்துவிடும்.
- வீட்டில் பேபி ஆயில் அல்லது ஆலிவ் எண்ணெய் இருந்தால், அதன் சில துளிகளை காதுக்குள் விடலாம். அப்போது பூச்சிகள் காதில் இருக்க முடியாமல் வெளியே வந்துவிடும் என Journal of Laryngology and Otology இதழில் வெளியான "Removal of Insects from the Ear: A Review of the Literature" ஆய்வில் தெரியவந்துள்ளது.
செய்யக்கூடாதவை...!
- காதுக்குள் பூச்சி சென்றால், உடனடியாக விரலை விட்டு அதை அகற்ற முயல வேண்டாம். இது காதில் வலியை தான் ஏற்படுத்துமே தவிர நிவாரணம் தராது.
- குறிப்பாக, பட்ஸ், ஊக்கு, கார் சாவி போன்ற பொருட்களை வைத்து பூச்சியை எடுக்க முயற்சி செய்ய வேண்டாம். இப்படி செய்வதால், பூச்சி மேலும் உள்ளே செல்லும் வாய்ப்பு உண்டு. மேலும், காது ஜவ்வும் சேதம் அடைய வாய்ப்புகள் உள்ளது.
- காதுக்குள் பூச்சி சென்றால், தீக்குச்சியின் மருந்தில்லாத நுணியை நுழைத்து அதை எடுக்க சிலர் முயற்சிப்பார்கள். இப்படி செய்வது காதின் உட்புறத்தில் உள்ள மென்மையான பகுதியை பாதிப்படையச்செய்யும்.
மருத்துவ ஆலோசனை: எண்ணெய், தண்ணீர் ஊற்றியும் காதுக்குள் இருக்கும் பூச்சி வெளியே வரவில்லை என்றால் உடனடியாக மருத்துவரிடம் சென்று காண்பிக்க வேண்டும். குறிப்பாக, குழந்தைகள் இந்த பிரச்சனைக்கு உள்ளானால் உடனே அவர்களை மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும்.
சுத்தமான பராமரிப்பு:
- வருமுன் காப்பது சிறந்தது என்பதற்கு ஏற்ப, வீட்டின் சூழலை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். படுக்கும் அறையை சுத்தமாக வைப்பதில் தொடங்கி, படுக்கை விரிப்பு, தலையணை போன்றவற்றை சுத்தமாக வைக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை அலச வேண்டும்.
- பலருக்கும் படுக்கை அறையில் அமர்ந்து சாப்பிடும் பழக்கம் இருக்கும். அதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். திண்பண்டங்கள், உணவுகளை சாப்பிடவோ சிந்தவோ கூடாது.
- வீட்டின் சுற்றுப்புறத்தில் உள்ள குப்பைகளை அவ்வப்போது அகற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
- முக்கியமாக பாதுகாப்பாக இருப்பது அவசியம். முடிந்த வரையில் காதுகளை மூடி தூங்குங்கள்.
இதையும் படிங்க:
சுவர் முழுவதும் குழந்தைகளின் கிறுக்கல்களா? டக்குனு சுத்தம் செய்ய 5 சூப்பர் டிப்ஸ் இதோ!
குழந்தைக்கு மசாஜ் செய்ய 'எந்த' எண்ணெய் பெஸ்ட்? அய்வு சொல்வது இதுதான்!
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.