மதுரை: திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா ஆடு, கோழி பலியிடுதல் விவகாரத்தில் இன்று மற்றும் நாளை (பிப்ரவரி 3, 4) ஆகிய இரண்டு நாட்களுக்கு 144 தடை ஆணை பிறப்பித்து மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார். இதனால், பிப்.3 மற்றும் 4 ஆகிய இரு தினங்களுக்கு எந்த விதமான போராட்டத்துக்கும் அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தரப்பில் வெளியான செய்திக் குறிப்பில், "வருகின்ற பிப்ரவரி 4ஆம் தேதியன்று இந்து அமைப்பினர் மற்றும் அதன் ஆதரவு அமைப்பினர் திருப்பரங்குன்றம் கோயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், அதற்கு தென் மாவட்டங்களில் இருந்து பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்ள உள்ளதால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.
இதனிடையே இந்து மற்றும் இசுலாமிய அமைப்புக்களை சார்ந்தோர் திருப்பரங்குன்றம் மலை குறித்து தங்கள் கோரிக்கையை பல்வேறு கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இதனால் இந்து மற்றும் இசுலாமிய அமைப்பினர் இடையே அசாதாரண சூழல் உருவாக வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் தாமதம்.. போராட்டத்தில் குதிக்க தொழிற்சங்கத்தினர் முடிவு!
அதனால், மதுரை மாவட்டம் மற்றும் மாநகர் முழுவதும் வெளி நபர்கள் பிரவேசிக்காத வகையில் 3-2-2025 காலை 6 மணி முதல் 4-2-2025 இரவு 12 மணி வரை 2 நாட்கள் மட்டும் மதுரை மாநகர் மற்றும் மதுரை மாவட்டத்தில் பொது அமைதியை பாதுகாக்கும் பொருட்டு, மனித வாழ்வு, பொதுப் பாதுகாப்பு மற்றும் பொது அமைதியைக் கருத்தில் கொண்டும் போராட்டங்கள், கூட்டங்கள் மற்றும் தர்ணாக்கள் போன்றவற்றிற்கு 163 BNSS (144 CrPC) தடை உத்தரவு மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.