ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் உள்பட இரண்டு இடங்களில் முகமுடி அணிந்து வந்த இரண்டு நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, விசாரணையை துரிதபடுத்திய காவல்துறையினர் சென்னையில் பதுங்கியிருந்த மூவரை கைது செய்தனர்.
இரு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசியது குறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா, சிப்காட் காவல் நிலையத்தை நள்ளிரவு நேரில் ஆய்வு செய்தார். மேலும் காவல் நிலையத்தில் பதிவான கண்காணிப்புக் கேமரா பதிவுகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஏழு தனிப்படைகள் அமைப்பு
மேலும், பெட்ரோல் குண்டு வீசுவதற்காக முகமூடி அணிந்து வந்த அடையாளம் தெரியாத நபர்களை பிடிக்க காவல் கண்காணிப்பாளர் தலைமையில், 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 4 துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் அடங்கிய 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த தனிப்படையினர் கைப்பற்றப்பட்ட கண்காணிப்புக் கேமரா பதிவுகளின் அடிப்படையில் விசாரணை நடத்தியதோடு, சென்னை, காஞ்சிபுரம், சேலம், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குற்றவாளிகளை தேடினர்.
முதற்கட்டமாக குற்றவாளிகள் வியாபாரிகளை குறிவைத்து பணம் கேட்டு மிரட்டும் கும்பலுடன் தொடர்புடையவர்களா? இதில் சிப்காட் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி தமிழரசன் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். விசாரணையை தீவிரப்படுத்தியதில் பெட்ரோல் குண்டு வீச்சில் சம்பந்தப்பட்ட ஹரி உள்பட மூவர் சென்னையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
துப்பாக்கியால் சுட்ட காவல் ஆய்வாளர்
உடனடியாக ராணிப்பேட்டை காவல் ஆய்வாளர் சசிகுமார் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர், சென்னை சென்று மூவரையும் அதிரடியாக கைது செய்து, ராணிப்பேட்டைக்கு அழைத்து வந்தனர். அவ்வாறு வரும் வழியில் வாலாஜா சுங்கச்சாவடி அடுத்த வாணி சத்திரம் பகுதியில் சிறுநீர் கழிப்பதற்காக காவல்துறையினர் வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.
![ஹரி தாக்கியதில் காயமடைந்த காவல் துணை ஆய்வாளர் முத்தீஸ்வரன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/03-02-2025/23461435_ranipet-petrol-bomb-issue-injured-police.jpg)
காரை விட்டு கீழே இறங்கிய போது திடீரென ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காவல் துணை ஆய்வாளர் முத்தீஸ்வரன், சிறப்பு துணை ஆய்வாளர் கண்ணன் ஆகியோரை தாக்க முயன்றுள்ளனர். இதனைக் கண்ட காவல் ஆய்வாளர் சசிகுமார், தனது கைத் துப்பாக்கியை எடுத்து தாக்குதல் நடத்தியவர்களின் முட்டிக்கு கீழே துப்பாக்கியால் சுட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதில் காயமடைந்த முத்தீஸ்வரன், தாக்குதல் நடத்திய ஹரி ஆகியோரை சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை மாவட்ட தலைமை மருத்துவமனையில் காவல் துறையினர் அனுமதித்தனர். ஹரிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்வரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
![தப்பித்து செல்ல முயன்றபோது காலில் சுட்டுப்பிடிக்கப்பட்ட ஹரி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/03-02-2025/23461435_ranipet-petrol-bomb-issue-accused.jpg)
சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் கண்காணிப்பாளர் துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தை நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இந்த விசாரணையின் இறுதியில், பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் மூன்று பேருக்கு மட்டும் தொடர்பு உள்ளதா? அல்லது மேலும் சிலர் சம்பந்தப்பட்டுள்ளனரா? என்பது விசாரணையில் தெரியவரும் என ராணிப்பேட்டை காவல்துறையினர் தெரிவித்தனர்.
நள்ளிரவு நடந்த சம்பவம்
பெட்ரோல் குண்டு வீசிய போது, மூடி இருந்த காவல்நிலைய இரும்பு கேட்டின் மீது பாட்டில் பட்டு உடைந்து அதில் இருந்த பெட்ரோல் எரிந்ததில் சுவற்றில் லேசாக தீப்புகை மட்டும் வந்ததாகவும், வேறு எந்த சேதமும் இல்லை எனவும், சம்பவத்தின் போது, பாரா காவலர் மட்டும் காவல் நிலையத்தில் இருந்ததாகவும் சிப்காட் காவல் நிலைய அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா விவகாரம்: மதுரையில் 144 தடை உத்தரவு - மாவட்ட ஆட்சியர்! |
தமிழரசனுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பிருக்கலாம் என காவல் துறையினர் முதலில் விசாரணை நடத்தினர். அதாவது, நவம்பர் 19, 2024 அன்று நிதி நிறுவனம் நடத்தி வரும் திவாகர் என்பவரை தமிழரசன் உள்ளிட்ட நான்கு நபர்கள் மிரட்டி பணம் கேட்டதாக புகார் நிலுவையில் உள்ளது.
அதாவது, ஜனவரி 21ஆம் தேதி கொடுத்த புகாரின் அடிப்படையில் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ், 308(3), 329(4), 296(b), 351(3) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.