சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக வளாகங்களில் வெளியாட்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது எனவும், பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையை கடைபிடிக்க வேண்டும் எனவும் பல்வேறு கட்டுப்பாடுகளை உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிக்கு ஒருவருக்கு, பல்கலை வளாகத்திற்கு பாலியல் வன்கொடுமை நடந்ததாகவும், அதனை வீடியோவாக எடுத்து மிரட்டிதாகவும் டிசம்பம் 23ஆம் தேதி புகார் கொடுக்கப்பட்டது. இந்த சம்பவம் வெளியாகி தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, பாலியல் வன்முறையில் ஈடுபட்ட நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட மாணவியின் எப்ஐஆர் பொதுமக்கள் மத்தியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர் பலரும் தங்களது கண்டனங்களையும், திமுக அரசின் மீது குற்றச்சாட்டையும் வைத்து வருகின்றனர். மேலும், இவ்வழக்கில் எப்ஐஆர் வெளியான சம்பவத்திற்கு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம், இதனை மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளது.
தற்போது, எப்ஐஆர் கசிவுக்கு தொழில்நுட்பக் கோளாறே காரணம் என தேசிய தகவல் மையம் விளக்கமளித்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டையே உலுக்கி வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் உயர் கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, செடிகள், புதர்கள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. பல்கலைக்கழகத்தின் வளாகத்திற்கு செல்லும் அனைவரும் அடையாள அட்டை அணிந்துச் செல்வதும் கட்டாயமாக்கபட்டுள்ளது.
இதற்கிடையே, பல்கலைக்கழகங்களில் மேற்காெள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், உயர்கல்வித்துறை செயலாளர் கோபால், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் ஆபிரகாம் ஆகியோர் பல்கலைக் கழகத்தின் பதிவாளர் உள்ளிட்டவர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
அதனைத் தாெடர்ந்து, உயர்கல்வித்துறையின் சார்ப்பில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு பாதுகாப்பு குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதனை தற்போது அண்ணா பல்கலைக்கழகம் தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
அதில், "உயர்கல்வித்துறை செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாணவிகளுக்கு கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பு முக்கியம் எனவும், அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதுடன், கல்லூரி வளாகம் பாதுகாப்பானதாக இருக்கும் வகையில் மாற்றி அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: லீக்கான மாணவி எஃப்ஐஆர்.. கண்காணிப்பில் 14 பேர்.. இரண்டு சேனல்கள் மீது வழக்கு பதிவு..!
- கல்வி நிறுவனங்களுக்கு சம்பந்தமில்லாத வெளிநபர்கள் நடமாட்டம் இருந்தால் அதுகுறித்து உடனடியாக பதிவு செய்ய வேண்டும்.
- வெளியாட்கள் உள்ளே வருவதால் தேவையற்ற விரும்பதகாத நிகழவுகள் ஏற்படுகின்றன. அதனை முற்றிலும் தடுக்க வேண்டும்.
- மாணவிகளுக்கு பாலியல் தொல்லைக் குறித்து விசாரணை செய்வதற்கான POSH அமைப்பு அனைத்து கல்லூரிகளிலும் இருக்க வேண்டும். இதுபோன்ற புகார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- மாணவர்களின் மீது தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடாது.
- பாதுகாப்பு நடவடிக்கைகள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்.
- பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் நிர்வாக அமைப்பில் உள்ள அனைத்து இடைவெளிகளையும் அதிகாரிகள் கண்டறிந்து, அந்த இடைவெளிகளை எவ்வாறு நிரப்புவது என்பதை உடனடியாக கவனிக்க வேண்டும்.
- அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தின் பின்னணியில், அனைத்துப் பல்கலைக்கழகங்களும் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு கூடுதல் தலைமைச் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: மாணவியின் எஃப்ஐஆர் கசிவு; தேசிய தகவல் மையம் மீது வழக்கு பதிய வேண்டும் - கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்!
- துணைவேந்தர்கள், பதிவாளர்கள், டீன்கள், பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
- பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையை அனைத்து உயர்கல்வி நிலையங்களிலும் கடைபிடிக்க வேண்டும்.
- வளாகத்திற்குள் ஆக்கிரமிப்புகளை அனுமதிக்கக்கூடாது. கல்லூரிகளுக்கு வாயில்கள் அதிகளவில் இருப்பதை குறைக்க வேண்டும்.
- போதைப் பொருள் எதிர்ப்புக்குழு போன்ற முக்கியமான குழுக்களை அமைத்து திறம்பட செயல்பட வேண்டும். காவல்துறையுடன் இணைந்து கல்லூரியின் அதிகாரிகள் பணியாற்ற வேண்டியதும் முக்கியமானது.
- மாணவர்கள் பணியாளர்கள் தவிர சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் முன் அனுமதியின்றி யாரும் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது. குறிப்பாக சந்தேகத்திற்குரிய குற்றவாளிகள் தடுக்கப்பட வேண்டும்.
- கல்லூரி வளாகத்தில் ரோந்து செல்வதுடன், அதற்கான பதிவேடும் பராமரிக்கப்பட வேண்டும். விளக்குள் சரியாக எரிவதுடன், மாணவர்கள் தங்களின் புகார்களை அச்சமின்றி பதிவு செய்ய ஊக்குவிக்க வேண்டும்.
- ஆராய்ச்சி மாணவர்களின் பிரச்சனைகள் தொடர்பாக அனைத்து நிறுவனங்களிலும் வழிகாட்டிகள் தனியாக ஒரு கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும். உயர்கல்வித்துறையில் தவறு செய்பவர்களை தண்டிக்காமல் விட மாட்டோம்,"
இவ்வாறு உயர்கல்வித்துறையின் சார்ப்பில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட பாதுகாப்பு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.