சென்னை:தமிழ்நாட்டின் வெள்ளப்பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை காரணமாக நேரிட்ட வெள்ளப்பெருக்கால் இதுவரை காணாத அளவுக்கு பாதிப்பு நேரிட்டுள்ளது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் கனமழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசிடம் நிவாரண நிதி கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார். அதில், "ஃபெஞ்சல் புயல், தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் வரலாறு காணாத பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேரிடரால் மொத்தம் 69 லட்சம் குடும்பங்களும், 1.5 கோடி மக்களும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தவிர்த்து, இந்த பேரழிவின் காரணமாக, 12 மனித உயிரிழப்புகளும், 2,416 குடிசைகள், 721 வீடுகள் மற்றும் 963 கால்நடைகள் இழப்புகளும் ஏற்பட்டுள்ளது. அத்தோடு, 2,11,139 ஹெக்டேர் பரப்பளவிற்கு விவசாய மற்றும் தோட்டக்கலை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதையும் படிங்க:ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.. உடனடியாக ரூ.2000 கோடி விடுவிக்க கோரிக்கை!
இந்த சேதங்கள் குறித்து தமிழ்நாடு அரசு முதற்கட்ட மதிப்பீட்டை மேற்கொண்டதில், தற்காலிக சீரமைப்பு பணிகளுக்கு ரூ.2,475 கோடி தேவைப்படுகிறது என கண்டறியப்பட்டுள்ளது. இந்த இயற்கைப் பேரிடரின் விளைவுகளை சமாளிக்க மாநிலத்திற்கு அவசர நிதி உதவி தேவைப்படுகிறது. பாதிப்புகளின் அளவு மற்றும் மறுசீரமைப்பின் அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு, இடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடியினை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்," எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக என்னைத் தொடர்புகொண்டு கேட்டறிந்தார். மாநில அரசு பேரிடர் பாதிப்பைத் திறம்பட எதிர்கொண்டு வருவதையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதையும் பிரதமரிடம் தெரிவித்து, தமிழ்நாட்டு மக்களைக் கடும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ள இந்தப் புயலின் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கி - புயல் சேதங்கள் குறித்த விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள ஒன்றியக் குழுவை அனுப்பிட வேண்டும் என்ற எனது கடிதத்தைக் குறிப்பிட்டு, இது குறித்து மீண்டும் வலியுறுத்தினேன். தமிழ்நாட்டின் இந்தக் கோரிக்கையை பிரதமர் அவர்கள் உடனடியாகப் பரிசீலித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று உறுதிபட நம்புகிறேன்,"எனக் குறிப்பிட்டுள்ளார்.