தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"தமிழகத்தின் நீராதார உரிமைகள் பறிபோவதை முதல்வர் வேடிக்கை பார்க்கிறார்" - பி.ஆர்.பாண்டியன் காட்டம்! - PR Panidian - PR PANIDIAN

Farmers Protest In Madurai: முல்லைப் பெரியாற்றில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறும் கேரளா மீது தமிழக அரசு வழக்கு தொடுக்க வேண்டும் என அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் மற்றும் பி.ஆர்.பாண்டியன் கோப்புப்படம்
மு.க.ஸ்டாலின் மற்றும் பி.ஆர்.பாண்டியன் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 28, 2024, 3:34 PM IST

மதுரை: கேரள அரசின் புதிய அணை கட்டுமானத்திற்கு எதிராக மதுரை தமுக்கம் தலைமை அஞ்சல் நிலையம் முன்பாக விவசாயிகள் முற்றுகை போராட்டம் இன்று நடைபெற்றது. தமிழகத்தைச் சார்ந்த பல்வேறு விவசாய அமைப்புகள் அதன் பிரதிநிதிகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

பி.ஆர்.பாணியன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

அப்போது, இந்த போராட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழகத்தின் நீராதார உரிமைகளை பாதுகாக்க தமிழக அரசு தீவிரமான சட்ட போராட்டத்தை நடத்த வேண்டும். கேரள அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உடனடியாக தொடர வேண்டும். இந்த விஷயங்களில் தமிழக முதல்வர் வாய்மூடி மௌனியாக இருக்கிறார்.

கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசின் துணையோடு தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணைகளைக் கட்டி வருகிறது. அமராவதி ஆற்றுக்கு வரக்கூடிய சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டுகிறது. சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணைகளை கட்டி முடித்துள்ளது. இதுபோன்று தொடர்ந்து பொருளாதார உரிமைகள் பறிபோவதை தமிழக முதல்வர் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார்.

இதனை இனி ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றுதான் முல்லைப் பெரியாறு நீர்ப்பாசன உரிமையை பாதுகாக்க பல்வேறு விவசாயிகளையும், விவசாய அமைப்புகளையும் ஒன்றுபடுத்தி வருகிறோம். ஆனால், தமிழ்நாடு அரசு தூக்குகிறது. அரசியல் வலிமை இருக்கிறது என்பதற்காக தமிழகத்தை ஆளுகின்ற அரசு இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருக்கிறது.

மத்திய அரசுக்கு தமிழக அரசு மறைமுகமாக துணை போகிறது என்ற அச்சம் ஏற்படுகிறது. இந்த அச்சத்தின் விளைவால்தான் விவசாயிகள் நாங்கள் இன்று வீறு கொண்டு எழுந்திருக்கிறோம். மதுரையில் இன்று நடப்பது முதற்கட்ட போராட்டம். எங்களின் கோரிக்கை நிறைவேறுகிற வரையும், உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கிற வகையில் விண்ணப்பித்துள்ள கேரள விண்ணப்பத்தை நிராகரிக்கிற வரையிலும் எங்களின் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்" என்று தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக, சொக்கிகுளத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் வரை பேரணியாகச் செல்ல முயன்ற விவசாயிகளை போலீசார் தடுத்ததால் சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசாரின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து விவசாயிகள் நெஞ்சில் அடித்துக் கொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும், போராட்டக்காரர்கள் முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட மத்திய அரசு அளித்த உத்தரவின் நகலை எரிக்க முயன்றதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதையும் படிங்க:தேசிய திறந்தநிலைப்பள்ளியின் படிப்புச்சான்று குறித்த அரசாணைக்கு இடைக்கால தடை

ABOUT THE AUTHOR

...view details