சென்னை: நாட்டின் 75வது குடியரசு தினம் வரும் வெள்ளிக்கிழமை ஜன. 26ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தின விழா கொண்டாட்டங்களைச் சீர்குலைக்கத் தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உள்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்ததையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தலின் பெயரில் இந்திய விமான நிலைய ஆணையம் நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்துள்ளது.
அதைப்போல், கடந்த 20ஆம் தேதி நள்ளிரவிலிருந்து, ஜன.30ஆம் தேதி நள்ளிரவு வரை சென்னை விமான நிலையத்திலும் 5 அடுக்கு பாதுகாப்பு அமலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அதிலும், இன்று (ஜன.23) நள்ளிரவிலிருந்து ஜனவரி 26ஆம் தேதி நள்ளிரவு வரை உச்சக்கட்ட பாதுகாப்பான 7 அடுக்கு, பாதுகாப்பு முறை அமல்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், இந்த உச்சக்கட்ட பாதுகாப்புகளையும் தாண்டி சென்னை சர்வதேச விமான நிலையம் புறப்பாடு பகுதிக்குள் மர்ம ஆசாமி ஒருவர் புகுந்து பல மணி நேரம் சுற்றி அலைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை சர்வதேச விமான நிலையம் புறப்பாடு பகுதியில் நேற்று (ஜனவரி 22) மாலை சுமார் 35 வயதுடைய மர்ம ஆசாமி ஒருவர் பாதுகாப்பு சோதனை பகுதிக்குள் சுற்றிக்கொண்டு அலைந்தார். அவர் நீண்ட நேரமாகப் பாதுகாப்பு சோதனைகள் நடக்கும் ஒவ்வொரு கவுண்டர்களாகச் சென்று கொண்டிருந்தார். இதைச் சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை கண்காணிப்பு கேமராவில் பார்த்த அதிகாரிகள், உடனே மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர்.
இதை அடுத்து, மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிகாரிகள் அந்த மர்ம ஆசாமியைப் பிடித்து விசாரித்தனர். அப்போது, அந்த மர்ம ஆசாமியிடம் விமான டிக்கெட், போர்டிங் பாஸ் எதுவும் இல்லை. அதோடு பி.சி.ஏ.எஸ் வழங்கும் சிறப்பு அனுமதி பாஸும் இல்லை. உச்சக்கட்ட பாதுகாப்பு விதிமுறை அமலில் இருக்கும் போது எந்தவித ஆவணமும் இல்லாமல் இந்த மர்ம ஆசாமி உள்ளே நுழைந்தார் என தெரிய வந்தது. இதை அடுத்து மர்ம ஆசாமியைப் பாதுகாப்பு அதிகாரிகள் தனி அறைக்கு அழைத்துச் சென்று தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஞானசேகரன் (வயது 35) என்பதும், இவருடைய நண்பர்கள் 3 பேர் நேற்று (ஜனவரி 22) மதியம் சென்னையிலிருந்து ஏர் இந்தியா விமானத்தில் இலங்கைக்குப் புறப்பட்டுச் சென்ற நிலையில், அவர்களை வழியனுப்ப இவர் சென்னை சர்வதேச விமான நிலையம், புறப்பாடு பகுதிக்கு வந்து உள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் நண்பர்கள் 3 பேர் விமான நிலையத்திற்குள் செல்லும் போது பாதுகாப்புப் பணியில் நின்ற 2 மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் அந்த 3 பேரின் விமான டிக்கெட், அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றைப் பரிசோதித்து உள்ளே அனுப்பினர்.