சென்னை:சென்னை அமைந்தகரை அண்ணா ஆர்ச் அருகே 46G அரசுப் பேருந்து நேற்று இரவு மகாகவி பாரதியார் நகர் பேருந்து நிலையத்திலிருந்து, கோயம்பேடு பேருந்து நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. இதில் சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த C.ஜெகன் குமார் என்பவர் நடத்துநராக பணிபுரிந்து வந்தார்.
அமைந்தகரை போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின்படி, "இந்த பேருந்து சென்னை அமைந்தகரை அண்ணா ஆர்ச் அருகே சென்று கொண்டிருந்த போது, மாநகரப் பேருந்து நடத்துநருக்கும், பயணி கோவிந்தன் என்பவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் பயணி தாக்கியதில் கீழே விழுந்த நடத்துநர் ஜெகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்"
இதையும் படிங்க:"ஏலச்சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி" - விசாரணையின்போது வழக்கறிஞர் ஓட்டம்.. முற்றுகையிட்ட மக்கள்!
தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த அமைந்தகரை போலீசார், நடத்துநர் ஜெகனின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் பயணி கோவிந்தனைக் கைது செய்த போலீசார், அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் அந்தப் பகுதியில் மற்ற மாநகரப் பேருந்துகள் இயக்காமல் போக்குவரத்து ஊழியர்கள் ஆங்காங்கே நிறுத்தி சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். டிக்கெட் எடுப்பதில் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தால், பயணி கோவிந்தனுக்கும், நடத்துநர் ஜெகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், நடத்துனராக பணியாற்றி வந்த ஜெகன்குமார் பயணி தாக்கியதில் காயமடைந்து உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து, வருத்தமும் வேதனையும் அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்த ஜெகன்குமார் குடும்பத்திற்கும் , உடன் பணியாற்றும் ஊழியர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ள முதலமைச்சர், ஜெகன்குமாரின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் முதலமைச்சர் பொதுநிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்