மதுரை: விறுவிறுப்பான பாலமேடு ஜல்லிக்கட்டு களத்தில் பார்வையாளர் கேலரியில் இருந்து 'SAVE ARITTAPATI' என டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிரான முழக்கம் எழுப்பி வருகின்றனர்.
மாட்டுப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு இன்று உலகப்புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிகட்டு நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரம் காளைகளும், 900 மாடுபிடி வீரர்களும் முன்பதிவு செய்துள்ள நிலையில் போட்டியில் சிறந்த காளையாக வெற்றி வாகை சூடம் முதல் பரிசு பெறும் காளைக்கு ஒரு டிராக்டரும், சிறந்த மாடுபிடி வீரருக்கு ஒரு காரும் வழங்கபடுகிறது.
மேலும், 2-ஆவது பரிசுபெறும் காளைக்கு கன்று குட்டியுடன், நாட்டு பசுமாடும், வீரருக்கு பைக் பரிசாக வழங்கபடவுள்ளது. மாடுபிடியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள் முதல் அண்டா சைக்கிள், பீரோ, குளிர்சாதனப் பெட்டி, டிவி, கட்டில், விவசாய உபகரணங்கள், விதைப் பைகள், உரங்கள், உள்ளிட்ட பல்வேறு பரிசுகளும் வழங்கப்படும் என விழாக் குழுவினர் தெரிவித்தனர்.
டங்ஸ்டன் எதிர்ப்புக் குரல்:
இந்நிலையில் ஜல்லிகட்டு களத்தில் பார்வையாளர் கேலரியில் இருந்து 'SAVE ARITTAPATI' என டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக கிராம மக்கள் பதாகைகள் ஏந்தி அமர்ந்துள்ளனர். மதுரை மாவட்டம் மேலூரில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் வெளியிட்டிருந்தது.
இதனை அடுத்து அப்பகுதியில் உள்ள பல்வேறு கிராம மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தமிழக அரசு சட்டமன்றத்தில் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் இயற்றியது. இதனை தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக மேலூர் பகுதி பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள் உள்ளிட்டோர் பல்வேறு வகையான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை போல் சீறி எழும் மதுரை டங்ஸ்டன் போராட்டம்!
ஜனவரி 7ஆம் தேதி நரசிங்கம்பட்டியில் இருந்து சுமார் 16 கிலோமீட்டர் தூரம் நடை பயண பேரணியாக சென்று மதுரை தல்லாகுளத்தில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பாக முற்றுகை போராட்டம் நடத்தினர்.
மக்கள் போராட்டம்:
இந்த பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையிலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுப்பட்ட நிலையில் 5000 பேர் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தற்போது மத்திய அரசு இந்த திட்டத்தை முழுவதுமாக கைவிட வலியுறுத்தி 'அடையாளக் கவன ஈர்ப்பு போராட்டங்கள்' நடத்தி வருகின்றனர். மேலும் டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்படும் வரை தங்களது போராட்டம் தொடரும் எனவும் கிராம மக்கள் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசல் அருகே பார்வையாளர்கள் கண்டுகளிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கேலரியின் மீது ஏறி 'அரிட்டாப்பட்டியை பாதுகாப்போம்' என வலியுறுத்தும் 'Save Arittapatti ' என எழுதப்பட்ட பதாகையை ஏந்தியவாறு முழக்கம் எழுப்பினர். மத்திய அரசு டங்ஸ்டன் திட்டத்தை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.