கோயம்புத்தூர்: கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்ட நிலையில் அதில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தங்கராமன், காவல் ஆய்வாளர் சண்முகவேலு மற்றும் ஆண், பெண் காவலர்கள் வள்ளி கும்மி நடனமாடிய விழாவை கோலாகலம் ஆக்கினர்.
தமிழர்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்று தை திருநாள் எனப்படும் பொங்கல் பண்டிகை. உலகம் எங்கும் உள்ள தமிழர்கள் இன்று வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் 'சமத்துவ பொங்கல் விழா' கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் மத வேறுபாடுகள் இன்றி அனைத்து காவல் துறையினரும் தங்களது குடும்பத்தினருடன் புத்தாடை அணிந்து பொங்கலிட்டு மகிழ்ந்தனர். விழாவில் பங்கேற்க வந்த கருமத்தம்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் தங்கராமன் மற்றும் அவரது குடும்பத்தினரை, மாட்டு வண்டியில் அழைத்து வந்தும், நடிகர் விஜயகாந்தின் நடித்த ‘நீ பொட்டு வெச்ச தங்க குடம்’ என்ற திரைப்படப் பாடலை ஒலிக்கவிட்டும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து புரோகிதர்களின் வேத மந்திரங்கள் முழங்க சூரியனை வழிபட்டு, கோமாதா பூஜை நடைபெற்றது. பின்னர், சங்கமம் கலைக்குழுவினரின் வள்ளி கும்மி நடனம் நடைபெற்றது. இதில் குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் கலந்து கொண்டு நாட்டுப்புற பாடல் மற்றும் பம்பை இசைக்கு ஏற்ப நடனமாடினர்.
அவர்களுடன் காவல் துறை துணை கண்காணிப்பாளர் தங்கராமன், காவல் ஆய்வாளர் சண்முகவேலு மற்றும் ஆண், பெண் காவலர்கள் வள்ளி கும்மி குழுவினருடன் இசைக்கு ஏற்ப நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து கணியூர் காவடியாட்ட குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதையும் படிங்க: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு.. 19 காளைகளை அடக்கிய கார்த்திக்கு கார் பரிசு!
பின்னர் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகள் மற்றும் காவலர்களுக்கு மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தங்கராமன் பரிசுகளை வழங்கினார்.
இதே போன்று கோவை மாவட்டம் அன்னூர் காவல் நிலையத்தில் தைத்திருநாளான பொங்கல் திருநாள் நிகழ்ச்சி உற்சாகத்துடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
காவல் நிலைய வளாகத்தில் காவலர்கள் அனைவரும் ஒரே மாதிரியான புத்தாடை அணிந்து வந்து புது பானையில் பச்சரிசி பொங்கலிட்டு இறைவனுக்கு படையலிட்டு வழிபாடு நடத்தினர். இதனைத் தொடர்ந்து, காவலர்கள் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக குடும்பத்துடன் மாட்டு வண்டியினை தாங்களாகவே ஓட்டி பயணம் செய்து மகிழ்ந்தனர்.
மேலும் காவலர்களின் குழந்தைகளுக்கு பலூன் ஊதும் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் குழந்தைகள் மற்றும் காவலர்கள் என அனைவரும் கலந்து கொண்டு பலூன் ஊதி வெடித்து பரிசு பெற்றனர். தொடர்ந்து காவல் நிலைய வளாகத்தில் குதிரை நடனம் எனப்படும் இசைக்கு ஏற்ப குதிரை நடனமாடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த சமத்துவ பொங்கல் கொண்டாட்டத்தை தொடர்ந்து மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி அதியமான் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் குழு புகைப்படங்கள் எடுத்து கொண்டனர்.