சென்னை: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த 2023-ஆண்டு வெளியான படம் ’ஜெயிலர்’. மலையாளம் மற்றும் கன்னடத்தின் முன்னணி நடிகர்களான மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். மேலும் மலையாள நடிகர் விநாயகன் வர்மனாக மிரட்டியிருந்தார். இவர்களுடன் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, வி.டி.வி கணேஷ் ஆகியோரும் நடித்திருந்தனர்.
அனிருத் இசையில் ’அலைப்பறை கிளப்புறோம்’ பாடல் ரஜினிகாந்த் Anthem ஆக மாறிவிட்டது. ரஜினிகாந்தை கொண்டாட அவரது ரசிகர்கள் இந்த பாடலைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். வெளியான போது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்த இந்த படம், பாக்ஸ் ஆபிஸில் ரூ.650 கோடி வரை மேல் வசூல் செய்தது. இதுவரை தமிழில் வெளிவந்த படங்களில் அதிகம் வசூல் செய்த படமாக ஜெயிலர் உள்ளது.
படத்தின் வெற்றியை தொடந்து, இயக்குனர் நெல்சன் திலீப்குமார் 'ஜெயிலர் 2' படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்தவாறு இருந்தன. ஜெயிலர் படத்திற்கு பிறகு ’லால்சலாம்’, ’வேட்டையன்’ என இரு படங்களில் நடித்திருந்தார் ரஜினிகாந்த். இந்த இரு படங்களுமே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ’கூலி’ என்ற படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.
இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்து வரும் இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கூலிக்கு பிறகு ரஜினிகாந்த்தின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று பொங்கல் தினத்தன்று ’ஜெயிலர்’ படத்தின் 2-ம் பாகத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு டைட்டில் டீசருடன் வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.
இந்த டைட்டில் டீசர் இணையதளத்தில் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளிலும் திரையிடப்பட்டது. குறிப்பாக சென்னையை பொறுத்தவரை கமலா, ரோகிணி, வெற்றி, ராக்கி, வூட்லண்ட்ஸ் ஆகிய திரையரங்குகளில் திரையிடப்பட்டது. அது மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் முக்கிய திரையரங்குகளில் இந்த டீசர் வெளியிடப்பட்டது. இதற்காக முன்பதிவு செய்து நிறைய ரசிகர்கள் திரையரங்குக்கு வந்திருந்தனர்.
இயக்குநர் நெல்சனின் வழக்கமான நகைச்சுவை பாணியில் இந்த டைட்டில் டீசர் உருவாக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் அனிருத்தும் இயக்குநர் நெல்சனும் கோவாவில் ஒரு அறையில் சென்னையில் ஏற்பட்ட ஃபெஞ்சல் புயல் குறித்து பேசிக் கொண்டிருக்கும் போதே அந்த அறைக்குள் துப்பாக்கிச் சூடு ஆக்ஷன்களுடன் நுழைகிறார் ரஜினி.
இதையும் படிங்க: 28 ஆண்டுகளுக்குப் பிறகும் கொண்டாடப்படும் ’இருவர்’.. இரு சாமனியர்கள் அரசியல் கதை
பின்னர், இருவரையும் பார்த்து சைகையில் ஏதோ கேட்டுவிட்டு வெளியே செல்கிறார், வெளியே சுவரை உடைத்துக் கொண்டு துப்பாக்கி ஏந்தியபடி வருபவர்களை ’ஜெயிலர்’ ரஜினிக்கே உரிய ஸ்டைலில் தாக்கும் வகையில் டைட்டில் டீசர் அமைந்துள்ளது. ‘ஜெயிலர் 1’ படத்தை போலவே, இரண்டாம் பாகத்திலும் ஆக்ஷன் காட்சிகள் அனல் பறக்கும் என்பது உறுதியாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இந்த ப்ரொமோ வீடியோ வெளியாகி உள்ளது. டைட்டில் டீசரே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.